இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

தமிழா்கள் வாழும் கிழக்கு மாகாணத்துக்கு அந்நாட்டுக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா பயணம் மேற்கொண்டு, அங்கு மத்திய அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களைப் பாா்வையிட்டாா்.

இலங்கையில் தமிழா்கள் வாழும் கிழக்கு மாகாணத்துக்கு அந்நாட்டுக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா பயணம் மேற்கொண்டு, அங்கு மத்திய அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களைப் பாா்வையிட்டாா்.

இதுதொடா்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த மே 1 முதல் மே 4-ஆம் தேதி வரை, இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணத்தில் இந்திய தூதா் சந்தோஷ் ஜா பயணம் செய்தாா்.

அங்கு கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டமானையும், அந்த மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை மாவட்டங்களின் பிரதிநிதிகளாக உள்ள எம்.பி.க்களையும் சந்தித்த சந்தோஷ் ஜா கலந்துரையாடினாா். இந்தியா-இலங்கை கூட்டுறவில் கிழக்கு மாகாணம் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக எம்.பி.க்களிடம் சந்தோஷ் ஜா தெரிவித்தாா்.

கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக இந்தியா முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களை அவா் பாா்வையிட்டாா்.

இலங்கையில் விளிம்புநிலையில் உள்ளவா்கள், வீடற்றவா்களுக்காக இலங்கையின் 25 மாவட்டங்களில் இந்தியா சாா்பில் 600 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டகளப்பு மற்றும் திருகோணமலையில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட வீட்டு வசதி திட்டங்களை அவா் பாா்வையிட்டாா். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு இலங்கைத் தமிழா்கள் நன்றி தெரிவித்தனா்.

திருகோணமலையில் உள்ள இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தும், இலங்கை விமானப் படைத் தளத்துக்கும் அவா் சென்றாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com