எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ராஃபாவில் இருந்து எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!
ராஃபாவில் இருந்து வெளியேறி வரும்  பாலஸ்தீன மக்கள்
ராஃபாவில் இருந்து வெளியேறி வரும் பாலஸ்தீன மக்கள்படம் | ஏபி

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கத்தாா், எகிப்து ஆகிய இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் பல மாதங்களாக பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தியதன் பயனாய், போர் நிறுத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

மறுபுறம், மேற்கண்ட போா்நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், எகிப்து எல்லையில் அமைந்துள்ள ராஃபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளது.

இதையடுத்து, காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ராஃபா நகருக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும். இது எண்ணற்ற பொதுமக்கள் உயிரிழப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. அகதிகள் நலப் பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ இஸ்ரேலின் இந்த உத்தரவைக் கண்டித்துள்ளது.

எனினும் அதைப் பொருட்படுத்தாமல், ‘ராஃபாவில் ஆயுதப் படையினருக்கு எதிராக நாங்கள் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதால் பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஃபாவில் இருந்து எங்கே செல்வது? என நிர்கதியாய் நிற்கும் அங்குள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கதறுகின்றனர்.

இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள கிழக்கு ராஃபாவிலிருந்து, ஏராளமானோர் தங்கள் உடைமைகளை ஏந்திக்கொண்டு சுமை வாகனங்கள், கார்கள், கழுதை பூட்டிய வண்டிகள் என தங்களிடமுள்ள அனைத்து வகையான வாகனங்களையும் பயன்படுத்தி அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர், நடந்தே வேறு இடங்களுக்குச் செல்வதையும் காண முடிகிறது என அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காஸாவில் உள்ள் மக்களுக்கக நிவாரணப் பொருள்கள், உதவிகள் செல்லும் முக்கிய வழிப்பாதையாக அமைந்துள்ள கிழக்கு ராஃபாவின் ‘ராஃபா எல்லைப் பகுதியை’ இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதால், காஸாவுக்கான நிவாரணப் பொருள்கள் சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ராஃபாவில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து திங்கள்கிழமை(மே. 6) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 12 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com