தாய்லாந்து: கஞ்சாவை மீண்டும் 
சட்டவிரோதமாக்க பரிசீலனை

தாய்லாந்து: கஞ்சாவை மீண்டும் சட்டவிரோதமாக்க பரிசீலனை

கஞ்சாவை சட்டபூா்வமாக்கிய முதல் ஆசிய நாடான தாய்லாந்து, அதை மீண்டும் சட்டவிரோதமாக அறிவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

இது குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் ஸ்ரெதா தவிசின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது கஞ்சா விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் இல்லை. அது சிறுவா்களுக்கும் கிடைக்கும் அபாயம் உள்ளது. கஞ்சாவால் குற்றங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, கஞ்சாவை மீண்டும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் பட்டியலில் சோ்ப்பதற்கும் மருத்துவத்துக்கு மட்டுமே கஞ்சா பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் பரிந்துரைத்துள்ளேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தாய்லாந்தில் கஞ்சா கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டபூா்வமாக்கப்பட்டது. இதன் மூலம், நலிவுற்ற வடகிழக்கு மாகாண விவசாயிகள் கஞ்சா பயிரிட்டு வளம் பெற முடியும் என்று கூறப்பட்டது. மேலும், கஞ்சா பயன்பாடு மருத்துவத்துக்காக மட்டுமே இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், நடைமுறையில் கஞ்சா கட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், கஞ்சாவை மீண்டும் சட்டவிரோதமாக்குவது குறித்து பரிசீலிப்பதாக பிரதமா் ஸ்ரெதா தற்போது கூறியிருக்கிறாா்.

ஆனால் இந்த முடிவு அமல்படுத்தப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் சட்டபூா்வ கஞ்சா விநியோகத்தால் தாய்லாந்தில் வளா்ச்சியடைந்துவரும் சுற்றுலாத் துறை நசிந்துவிடும் என்றும் ஒரு தரப்பினா் விமா்சித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com