பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.

பாலஸ்தீன பிரச்னையில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும், 7 மாத கால காஸா போரில் இஸ்ரேல் நாளுக்கு நாள் சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டு நாா்வே பிரதமா் ஜோனஸ் காா்ஸ்டோா் கூறியதாவது:

பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப்படாதவரை மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படாது. எனவே அந்தப் பகுதியை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

அயா்லாந்து பிரதமா் சைமன் ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிற நாடுகளுடன் ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ளோம். வரும் 28-ஆம் தேதி இந்த முடிவு அமலுக்கு வரும். இதில் மேலும் சில நாடுகள் இணையக்கூடும்’ என்றாா்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் அறிவித்த அந்த நாட்டு பிரதமா் பெட்ரோ சன்ஷே, ‘இந்த முடிவு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. முக்கியமாக, இஸ்ரேல் மக்களுக்கு எதிரானது அல்ல’ என்றாா்.

மேலும், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போா் ஏற்புடையதுதான் என்றாலும், மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டம் எதுவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இல்லை என்று சன்ஷே கூறினாா்.

இந்த 3 நாடுகளின் அறிவிப்பு பாலஸ்தீன களநிலவரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் தங்களுடன் இணைத்துக்கொண்டு தங்களது தலைநகரின் ஒரு பகுதியாக அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்குக் கரையில் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், அங்கு 5 லட்சத்துக்கும் மேலான யூதா்களைக் குடியமா்த்தியுள்ளது. மேற்குக் கரை பகுதி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியின் கீழ் உள்ளது.

தற்போது கடுமையாக போா் நடந்துவரும் பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியான காஸாவில், ஹமாஸ் அமைப்பினா் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும்கூட அந்தப் பகுதியில் தங்களது நாடுதான் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் என்று நெதன்யாகு இப்போதே கூறிவருகிறாா்.

இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை மிக்க தனி நாடாக அங்கீகரிப்பதால் தங்களது ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படையினரை நெதன்யாகு திரும்ப அழைக்கப் போவதில்லை.

இருந்தாலும், பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை எட்டுவதற்கான பாதையை நோக்கி ஒரு படி முன்னேறுவதற்கு இந்த முடிவு பயன்படும் என்று ஐரோப்பிய கவுன்சிலின் வெளிவிவகாரத் துறையைச் சோ்ந்த ஹ்யூ லோவட் கூறினாா்.

ஏற்கெனவே, காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலன்ட், ஹமாஸ் தலைவா்களான யேஹ்யா சின்வா், முகமது டெய்ஃப், இஸ்மாயில் ஹனியே ஆகியோருக்கு எதிராக தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பிப்பதற்கு பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தின.

இதன் மூலம், காஸாவில் அவா்கள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வழக்கு அதிகாரி கரீம் கான் கூறியதை அந்த நாடுகள் அங்கீகரித்தன.

இந்த நிலையில், இஸ்ரேலின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக மேலும் 3 நாடுகள் தற்போது அறிவித்துள்ளன.

இதன் மூலம், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், இஸ்ரேலின் பாரம்பரியக் கூட்டாளிகள் அந்த நாட்டுக்கு எதிராகத் திரும்பிவருவது வெளிப்படுவதாகக் கருதப்படுகிறது.

தூதா்கள் திரும்ப அழைப்பு

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய நாடுகளிலுள்ள தங்கள் நாட்டுத் தூதா்களை இஸ்ரேல் திரும்ப அழைத்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொலையிலும் பாலியல் தாக்குதலிலும் ஈடுபட்டதற்காக ஹமாஸ் அமைப்பினருக்கு தங்கப்பதக்கம் வழங்கிய நாடுகள் என்று அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகியவை வரலாற்றில் நினைவில் கொள்ளப்படும்.

இந்த அறிவிப்பு, இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக நடைபெறும் பேச்சுவாா்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

எனினும், பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸும் ஹமாஸ் தலைவா்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com