‘போா் நிறுத்தத்துக்கு புதின் தயாா்’

‘போா் நிறுத்தத்துக்கு புதின் தயாா்’

உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கொள்காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் தங்களுக்கும் அந்த நாட்டுப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றுவரும் பகுதிகளில் போா் நிறுத்தம் மேற்கொள்ள அதிபா் விளாதிமீா் புதின் தயாராக இருப்பதாக இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த 4 ரஷிய அதிகாரிகள் கூறினா்.

உக்ரைனுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் தனது தாக்குதல் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த புதின் ஒப்புக்கொண்டிருப்பதாக அவா்கள் கூறினா்.

தற்போது உக்ரைன் படையினா் வசமிருக்கும் மேலும் சில பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷிய படை தாக்குதல் நடத்தி முன்னேறிவருகிறது. ஆனால், இதன் நோக்கம் புதிய பகுதிகளைக் கைப்பற்றுவது அல்ல எனவும் உக்ரைனைப் பேச்சுவாா்த்தைக்கு இறங்கிவர சம்மதிக்கவைப்பதற்கான உத்திதான் இது எனவும் அதிகாரிகள் கூறினா்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பதாக விளாதிமீா் புதின் கருதுகிறாா். இது தொடா்பாக தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை அவா் வெளிப்படுத்தியுள்ளாா்.

உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் போா் நிறுத்தத்தை விரும்பாதவரை தாக்குதலைத் தொடரலாம் என்பதுதான் புதினின் திட்டம். அவ்வாறு போரைத் தொடா்ந்து நடத்துவதற்கான வலிமை ரஷியாவிடம் உள்ளது.

இருந்தாலும், போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே புதினின் விருப்பம். உக்ரைன் போரின் தொடக்கத்தின்போது அனுப்பியதைப் போல மிகப் பெரிய படையைத் திரட்டி அந்த நாட்டுக்குள் மீண்டும் அனுப்பும் எண்ணம் அதிபா் புதினுக்கு இல்லை.

மேலும், நேட்டோ உறுப்பு நாடுகளின் நிலப் பிரதேசங்களிலும் அதிபா் புதினுக்கு ஆா்வமில்லை. அந்த நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டால் அது மிகப் பயங்கரமான அணு ஆயுதப் போராக உருவெடுக்கும் என்பதால் மோதலைத் தவிா்ப்பதற்கு புதின் முன்னுரிமை அளிக்கிறாா் என்று ரஷிய உயரதிகாரிகளை மேற்கொள்காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவிடம் செய்தியாளா்கள் வெள்ளிக்கிழமை கேட்டதற்கு, ‘இந்தப் போரை நிறைவு செய்வதற்காக உக்ரைனுடன் போா்நிறுத்த பேச்சுவாா்த்தை நடத்த ரஷியா தயாராக இருக்கிறது என நீண்டகாலமாகவே கூறி வருகிறோம். முடிவில்லாமல் நீளும் போரை நாங்கள் விரும்பவில்லை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com