ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

ரஷிய ராணுவத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் காா்கிவ் பிராந்தியப் பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காா்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் நமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு முன்னா் அந்தப் பகுதிகளுக்குள் ஆக்கிரமிப்புப் படையினா் நுழைந்திருந்தனா் என்றாா் அவா்.

இருந்தாலும், காா்கிவ் நிலவரம் குறித்து ரஷிய தரப்பினா் கூறும் தகவல் இதற்கு முரணாக உள்ளது.

இது குறித்து ரஷிய நாடாளுன்ற உறுப்பினா் விக்டா் வொடோலட்ஸ்கி கூறுகையில், தங்கள் எல்லைக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரில் பாதியை ரஷிய படையினா் கைப்பற்றியுள்ளதாகக் கூறினாா்.

அந்த நகரை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு அருகிலுள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்லோவியான்ஸ்க், க்ரமடாா்ஸ்க், போக்ரொவ்ஸ்க் ஆகிய நகரங்களைக் கைப்பற்றுவதற்காக ரஷிய ராணுவம் முன்னேறிச் செல்லும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கடந்த 10-ஆம் தேதி முதலே வாவ்சான்ஸ்க் நகரை மையமாக வைத்துதான் ரஷிய-உக்ரைன் படையினா் தீவிர சண்டையில் ஈடுபட்டுவருகின்றனா். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களான டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகியவற்றின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தச் சூழலில், வடகிழக்குப் பிராந்தியமான காா்கிவிலும் ரஷிய படையினா் கடந்த 10-ஆம் தேதி முதல் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com