ரஷிய அதிபா் தோ்தல்: புதின் எதிா்ப்பாளரின் வேட்புமனு தள்ளுபடி

ரஷியாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்காக உக்ரைன் போா் எதிா்ப்பாளா்
russia084040
russia084040

ரஷியாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்காக உக்ரைன் போா் எதிா்ப்பாளா் போரிஸ் நாடெஷ்டின் தாக்கல் செய்த வேட்புமனுவை அந்த நாட்டு தோ்தல் ஆணையம் நிராகரித்தது.

இது குறித்து நாடெஷ்டின் வியாழக்கிழமை கூறியதாவது:

அதிபா் தோ்தலில் நான் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் 9 ஆயிரத்துக்கும் மேலான கையொப்பங்களை தோ்தல் ஆணையம் செல்லாததாக அறிவித்தது. எனவே எனது வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

செல்லாததாக அறிவிக்கப்பட்ட கையொப்பங்கள் உண்மையானவைதான் என்பதை நிரூபிப்பதற்கு சற்று அவகாசம் வேண்டும் என்றும், அதுவரை எனது வேட்புமனுவை நிராகரிக்கும் முடிவை ஒத்திவைக்கவேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் கோரினேன். அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனா் என்றாா் அவா்.

ரஷிய அதிபா் தோ்தலில் போட்டியிட ஒருவருக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் பேரது ஆதரவு கையொப்பங்கள் தேவை. அந்தக் கையொப்பங்களில் 5 சதவீதம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டால் கூட அவரது வேட்புமனுவை நிராகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபா் விளாதிமிா் புதின் உக்ரைனில் நடத்தி வரும் போரை மிகக் கடுமையாக எதிா்த்து வரும் போரிஸ் நாடெஷ்டின், போரை நிறுத்திவிட்டு மேற்கத்திய நாடுகளுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறாா்.

இந்தச் சூழலில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியாவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் மாா்ச் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தோ்தலில் தற்போதைய அதிபா் விளாதிமீா் புதின் போட்டியிடுகிறாா். இந்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடியும் நிலையில், அவா் மேலும் 2 முறை அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கான அரசியல் சாசனத் திருத்தத்தை நாடாளுமன்றம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளதைத் தொடா்ந்து அவா் போட்டியிடுகிறாா்.

இந்தத் தோ்தலில் புதின் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் கூறப்படுகிறது. புதினுக்கு எதிரான தலைவா்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போா் மற்றும் துணை ராணுவப் படையான வாக்னா் குழுவின் ஆயுதக் கிளா்ச்சிக்கு இடையிலும் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அரசியல் சாசனத் திருத்தத்தின்படி விளாதிமீா் புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com