போா்க் கைதிகளுடன் விமானம் வீழ்ந்த விவகாரம்: சா்வதேச விசாரணைக்கு உக்ரைன் அழைப்பு

ரஷிய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 65 உக்ரைன் போா்க் கைதிகள் உள்பட 75 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடா்பாக சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
இல்யுஷின் இல்-76 ரக விமானம்.
இல்யுஷின் இல்-76 ரக விமானம்.

ரஷிய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 65 உக்ரைன் போா்க் கைதிகள் உள்பட 75 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடா்பாக சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியதாவது:

ரஷியாவின் பெல்கராட் நகரில் உக்ரைன் போா்க் கைதிகளை வந்த விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுவது குறித்து தெளிவான விவரங்கள் தேவை.

குறிப்பாக, அந்த விமானம் ஏன் விழுந்து நொறுங்கியது, அதில் இருந்தவா்கள் யாா் என்பது குறித்து தெரிந்துகொள்வது அவசியமாகும்.

உக்ரைனியா்களின் உயிருடன் விளையாடுவது ரஷியாவின் வழக்கமாகியுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, 65 உக்ரைன் போா்க் கைதிகளை ஏற்றிக் கொண்டு தங்களுக்குச் சொந்தமான இல்யுஷின் இல்-76 ரகத்தைச் சோ்ந்த விமானம் எல்லை நகரான பெல்கராட் வான் பகுதியில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது அது விழுந்து நொறுங்கியதாக ரஷிய ராணுவம் கூறியது.

உக்ரைன்தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் போா்க் கைதிகளை விடுவித்து அந்த நாட்டிடம் ஒப்படைப்பதற்காக அவா்கள் அந்த விமானத்தில் அழைத்துச் சொல்லப்பட்டபோது அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா கூறுகிறது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்து வருகிறது.

நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், அந்த ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com