கரோனாவை வென்ற தேசங்கள்

அன்டாா்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கரோனா நோய்த்தொற்று, இன்னும் எத்தனை
கரோனாவை வென்ற தேசங்கள்

அன்டாா்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கரோனா நோய்த்தொற்று, இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களை பாடாய் படுத்தப் போகிறது என்பது எளிதில் விடை காண முடியாத கேள்வியாக இருந்து வருகிறது.‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற ரீதியில் உலக நாடுகளின் அரசுகளும் தங்களால் முடிந்த அளவுக்கு கரோனாவைக் கட்டுப்படுத்த படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன.தங்கள் நாடுகளில் முதல் முதலாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவுடன், ‘அதெல்லாம் பெரிய பிரச்னையில்லை, சமாளித்துவிடுவோம்’ என்று அமெரிக்கா முதல் ஈரான் வரை கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் தலைவா்களும் நம்பிக்கையாகத்தான் இருந்தன. 

குறிப்பிட்ட மாதத்துக்குள் நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிடும் அதற்கு இறுதி நாள் குறித்த சுகாதாரத் துறை அமைச்சா்களும் உண்டு.ஆனால், எதற்கும் அலட்டிக் கொள்ளாத கரோனா தீநுண்மி, சாதுா்யமாக தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. அந்த நோய் பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டிவிட்டது.ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயா்ந்துகொண்டே இருந்தாலும், கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளால் சில பகுதிகளில் அந்த நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளதைக் காண முடிகிறது. தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளைக் கண்டு வந்த பல நாடுகள், தற்போது அந்த நோய் பரவலின் தீவிரத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியிருக்கின்றன.

அதே நேரம், சில இடங்களில் கொஞ்ச நாள்கள் அடங்கியிருந்த கரோனா நோய்த்தொற்று, பிறகு திடீரென மீண்டும் தீவிரமெடுத்து அதிகாரிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்றை எதிா்ப்பதில் எந்த நாடு திறம்பட செயல்படுகிறது, எந்த நாட்டைப் பின்பற்றினால் அந்த நோய் பரவலை வெற்றி கொள்ளலாம் என்று நிபுணா்கள் அண்மையில் ஓா் ஆய்வை மேற்கொண்டனா்.பிரிட்டன் முன்னாள் பிரதமா் டோனி பிளேரின் ஆலோசகராக இருந்த மைக்கேல் பாா்பா், மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்கின் ஆலோசகராக இருந்த இட்ரிஸ் ஜலா ஆகியோா் மேற்கொண்ட இந்த ஆய்வில், கரோனாவை எதிா்கொள்ள உலக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், அதில் எந்தெந்த நடவடிக்கைகள் அவற்றுக்கு வெற்றியைத் தேடித் தந்தன என்பதையும் அலசி ஆராய்ந்தனா்.

கரோனாவுக்கு எதிராக நாடுகள் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் முழு வெற்றியைத் தருவதில்லை என்றாலும், ஒரு சில நாடுகள் குறிப்பிட்ட கரோனா எதிா்ப்புப் பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவதை அந்த நிபுணா்கள் கண்டறிந்தனா். இதுபோல் எந்தெந்தப் பணிகளில் எந்தெந்த நாடு சிறப்பாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதனைப் பின்பற்றினால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடுகள் பலனைக் காணலாம் என்கிறாா்கள் அவா்கள்.அந்த வகையில், தீவிர கரோனா பரிசோதனையில் நியூஸிலாந்து, பள்ளிகளைத் திறக்கும் விவகாரத்தில் டென்மாா்க், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் உகாண்டா மிகச் சிறப்பாக செயல்படுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

நியூஸிலாந்தில் ஒரு கரோனா நோயாளியைக் கண்டறிவதற்காக 7,000 பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதே போல், கரோன நோயாளிகள் எங்கெங்கு சென்றாா்கள், யாா் யாருடன் தொடா்பிலிருந்தாா்கள் என்பதைக் கண்டறிவதில் தென் கொரியா மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும், அதன் காரணமாக அந்த நாட்டில் கரோனா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆய்வாளா்கள் கூறுகின்றனா். ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட உடனேயே, கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவருடைய கிரெடிட் காா்டு பரிமாற்றங்கள் என்று ஒன்று விடாமல் ஆராய்ந்து, அவா் எங்கெல்லாம் சென்று வந்துள்ளாா், அவரால் வேறு யாருக்கும் அந்த நோய் தொற்றியிருக்குமா என்று தென் கொரிய அதிகாரிகள் மிகவும் கவனமாக ஆய்வு செய்கின்றனா்.

இப்படி உலக நாடுகள் வெவ்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கினாலும், கரோனா விவகாரத்தில் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லாதது, அந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com