தமிழகம் 2022

சிவகாசி அருகே வடுகப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு.  8 பேர் படுகாயம்.
தமிழகம் 2022

ஜனவரி

1:சிவகாசி அருகே வடுகப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு.  8 பேர் படுகாயம்.

12:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.

2021-22-ஆம் கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பிப்ரவரி

3:சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

8:சட்டப்பேரவையில் 2-ஆவது முறையாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டது.

9:அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

22:சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  21 மாநகராட்சிகள், பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளைக் கைப்பற்றி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

28:முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய தன் வரலாற்று நூலான "உங்களின் ஒருவன்" புத்தகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட திமுக பொதுச் செயலர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பிகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்பு.

மார்ச்

1:முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 69-ஆவது பிறந்த நாளையொட்டி  "நான் முதல்வன்" திட்டத்தை தொடக்கி வைத்தார்.

4:சென்னை  மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயராக ஆர்.பிரியா (28) பொறுப்பேற்பு. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் மூலம் மேயர், துணை மேயர்களாக வெற்றி பெற்று பொறுப்பேற்றனர்.

7:ரூ.1,100 கோடி மோசடி வழக்கில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த "டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட்' என்ற தனியார் நிதி நிறுவன இயக்குநர்கள் உமா சங்கர், அருண் குமார், ஜனார்த்தனன், சரவண குமார் ஆகிய 4 பேரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

8:கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. இதேபோல் யுவராஜின் கார் ஓட்டுநருக்கும் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

15:வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 59 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

21:கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்விதமான அனுமதியையும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.

22:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், பொதுமக்களின் கருத்து வலுத்ததால்தான், நான் இந்தக் கோரிக்கையை வைத்தேன் எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் 
ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்.

23:சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் வைகோ மகன் துரை வைகோ அக்கட்சியின் தலைமை 
கழகச் செயலராக தேர்வு.

24:துபையில் 192 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் 
மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் துபை புறப்பட்டார்.

31:ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டம் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஏப்ரல்

2:தில்லி தீன்தயாள் பகுதியில் கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

7:மருத்துவ இளநிலை படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

14:தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணிப்பு.

16:மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

25:தமிழகத்தில் உள்ள 13 மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில் மாநில அரசே நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

27:தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் வீதியுலாவின்போது உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு. 17 பேர்  படுகாயம்.

மே

8:தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப் பிரவேசம் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அறிவித்தார்.

18:ராஜீவ்  கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

26:தமிழகத்தில் எழும்பூர், மதுரை, ராமேசுவரம், காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

28:சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜூன்

13:கும்பகோணம் அருகே ஜாதி கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியை விருந்துக்கு அழைத்து வெட்டி  படுகொலை. குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது.

27: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினர். அப்போது ஓபிஎஸ் மீது பாட்டில் வீசப்பட்டது.

ஜூலை

1:தமிழக காவல் துறை நியமனங்களில் முன்னாள் துணை ராணுவப் படையினருக்கு அளிக்கப்பட்டு வந்த 5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், இனி முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

4:சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம் ரூ.1.25 கோடி முதலீட்டில் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

11அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அலுவலகத்துக்கு வருவாய்த் துறை சீல் வைத்தது.

11:சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்தும் தீர்மானம் நிறைவேற்றம்.

17:கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி மரணத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம். இதில் காவல்துறை, பள்ளி வாகனங்கள் உள்பட 13 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

20:இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

27:தமிழகத்தில் முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 - 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ரூ.3,356 கோடியில் செயல்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு.

28:சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம். சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்களுடன்  பிரதமர் மோடி,  முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

ஆகஸ்ட்

1:சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அல்லது திருவள்ளூர் மாவட்டம் பன்னூரில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

3:அறிவியல் வளர்ந்து தொழில்நுட்பம் பெருகிவிட்டதால் தமிழகத்தில் "தண்டோரா' அறிவிப்பு இனி தேவையில்லை என தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்தார்.

5:சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை  நீதிமன்றம் தீர்ப்பு.

7:மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் முதல்வர் 
மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

9:இரட்டை இலை சின்னத்தில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் முதல் எம்.பி. மாயத்தேவர் (87) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

14:தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 6 வரை உயர்வு. இதைத் தொடர்ந்து, பால் சார்ந்த உணவுப் பொருள்களான நெய், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்வு.

22:தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு.

செப்டம்பர்

5:அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் "புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

15:முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான "காலை சிற்றுண்டி' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

20:திமுக துணைப் பொதுச் செயலர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்தார். இவர் மத்திய-மாநில அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

27:தொடக்கப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அளவில் ஒரே வினாத்தாள் பயன்படுத்தும் முறையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியது.

அக்டோபர்

9:சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு.  பொதுச் செயலராக துரைமுருகன்,  பொருளாளராக டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலராக கனிமொழி தேர்வு.

13:மானியம் பெறும் அனைத்து நுகர்வோர்களும் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.

13:சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு தள்ளி கல்லூரி மாணவி சத்யா (20) கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் (23) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

18:முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பேரவையில் தாக்கல். வி.கே.சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் பரிந்துரை.

18:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல். துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை.

19:தமிழகத்தில் ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான அவசர சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
26:நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு பிறந்த இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல் இல்லை என்பதும், அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

நவம்பர்

10:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் உள்பட 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

11:முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருந்து வந்த நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

14:வனச்சரகர் சிதம்பரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் விடுதலை. சேலம் மத்திய சிறையில் இருந்த வீரப்பனின் அண்ணன் மாதையன் வயது மூப்பின் காரணமாக  மே மாதம் உயிரிழந்தார்.

15:மூட்டு அறுவை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக  சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

டிசம்பர்

2:2022-23-ஆம் கல்வியாண்டில் உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி.

9:வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலின் தாக்கத்தால் 5 பேர் பலியாகினர். 350-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

14:திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்பு. இதன்மூலம் தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com