தேசியம் 2023

இமயமலைத் தொடரில் உள்ள உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினில் முதல் பெண் அதிகாரியாக கேப்டன் சிவா செளஹான் நியமிக்கப்பட்டார்.
தேசியம் 2023

ஜனவரி

3:: இமயமலைத் தொடரில் உள்ள உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினில் முதல் பெண் அதிகாரியாக கேப்டன் சிவா செளஹான் நியமிக்கப்பட்டார்.
4:: இந்தியாவின் 122 ஆண்டு வானிலை வரலாற்றில் வெப்பமான மாதமாக 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
13:: உலகின் நீண்ட நதிப் போக்குவரத்தான "எம்.வி. கங்கா விலாஸ்' சொகுசுக் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
26:: கரோனா பெருந்தொற்றுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மூக்கு வழியாகச் செலுத்தும் "இன்கோவாக்' தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. 

பிப்ரவரி

6:: கர்நாடகத்தின் தும்கூரு மாவட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொழிற்சாலையில் அடுத்த 20 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
13:: ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது..
17:: தில்லி, மும்பை பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து வருமான வரித் துறை வெளியிட்ட அறிக்கையில், அந்த செய்தி நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
18: : மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகள் (சீட்டா) கொண்டு வரப்பட்டன.
26: : கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

மார்ச்

2:: திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜகவும், மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றின.
5:: உலகப் பெருங்கடல்கள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா உள்பட 200 ஐ.நா. உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டன.
7:: இந்திய விமானப் படையில் பாகிஸ்தான் எல்லையையொட்டி மேற்கு படைப் பிரிவின் தாக்குதல் பிரிவுக்கு முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டார்.
9:: தில்லி கலால் கொள்கை முறைகேடு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிறையிலுள்ள மனீஷ் சிசோடியா, அது தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
18:: இந்தியாவில் முதல் முறையாக பிரேமா ராம் செளத்ரி என்னும் பெண்ணுக்கு முழு கை மாற்று அறுவை சிகிச்சை மும்பையில் மேற்கொள்ளப்பட்டது.
23:: மோடி சமூகப் பெயரை விமர்சித்துப் பேசியதற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
26:: இஸ்ரோ சார்பில் ஒரே விண்கலத்தில் அதிகபட்சமாக 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

ஏப்ரல்

19:: ஐ.நா. அறிக்கையின்படி, உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட 
நாடுகள் பட்டியலில், 142.57 கோடி பேர் கொண்ட சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்தது. இந்தியாவின் மக்கள்தொகை 142.86 கோடி.
20: ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் மேற்கொண்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.
20: தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அஸ்ஸாம் மற்றும் அருணாசல பிரதேசத்தின் 50 ஆண்டுகால எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகியோர் கையொப்பமிட்டனர்.
25:: உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சூடானிலிருந்து "ஆபரேஷன் காவேரி' திட்டம் மூலம், முதல்கட்டமாக 278 இந்தியர்கள் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூலம் மீட்கப்பட்டனர்.

மே

2:: கோ-ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
3:: மணிப்பூரில் பெரும்பான்மை சமூகத்தினரான மைதேயிகளுக்கும், சிறுபான்மை சமூகத்தினரான குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது.
13: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
28:: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

ஜூன்

1:: ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் நடுத்தர தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "அக்னி-1' ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
2:: ஒடிஸாவில் உள்ள பாலாசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதி விபத்தில் சிக்கின. இந்தக் கோர விபத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 1,000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
8:: ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் அதிநவீன "அக்னி பிரைம்' பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 
12:: விசா பிரச்னையில் சீனாவில் இருந்த கடைசி இந்திய பத்திரிகையாளரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு சீனா உத்தரவிட்டது.
22:: இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பு, இருநாட்டு உறவுகள் தொடர்பாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

ஜூலை

2: மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜீத் பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளும் சிவசேனை-பாஜக கூட்டணியில் இணைந்தார். துணை முதல்வராக அஜீத் பவாரும், அமைச்சர்களாக அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேரும் பதவியேற்பு.
11: இணையவழி விளையாட்டுகளுக்கு பந்தய தொகையில் 28 சதவீதம் வரி விதிக்க சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் முடிவு. 
14: நிலவின் தென் துருவ ஆய்வுக்காக, மார்க்-3-எம்4 கன ரக ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
18: பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் கைகோத்து, "இந்தியா' என்ற பெயரில் கூட்டணி உருவாக்கம்.
22: ஒடிஸா முதல்வர் பதவியில் 23 ஆண்டுகள் 139 நாள்களை நிறைவு செய்த நவீன் பட்நாயக், நாட்டின் இரண்டாவது நீண்டகால முதல்வர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

ஆகஸ்ட்

5:: இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரியில் 418 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியேற்றம். நாட்டிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியக் கொடி இது.
1:: ஆங்கிலேயேர் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான  மூன்று மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம். இந்திய தண்டனைச் சட்டம் 1860-ஐ மாற்றம் செய்ய "பாரதிய நியாய சம்ஹிதா' மசோதா, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898-ஐ மாற்றம் செய்ய "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' மசோதா, இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய "பாரதிய சாக்ஷிய' மசோதா தாக்கல்.
14: ஹிமாசல பிரதேச நிலச்சரிவுகளில் சுமார் 50 பேர் உயிரிழப்பு.
23:: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்-3 விண்கலத்தின் "விக்ரம்' லேண்டர். இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என புதிய வரலாறு படைத்தது இந்தியா.
24:: நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து ஆய்வைத் தொடங்கியது.
24:: இந்தியா, பிரேஸில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆர்ஜென்டீனா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை இணைத்து விரிவாக்க முடிவு.
29:: நிலவின் தென் துருவப் பகுதி மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

செப்டம்பர்

1:: நாடு முழுவதும் மக்களவை மற்றும் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் "ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்க  முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை அமைத்தது மத்திய அரசு.
2:: சூரியனை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சூரிய ஆய்வுக்கான இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும். 
9:: இந்தியத் தலைமையின்கீழ், தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் பிரகடனம் உறுப்பு நாடுகளால் ஒருமனதாக ஏற்பு. இந்தியாவின் முயற்சியால், ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைப்பு. உலக உயிரி எரிபொருள் கூட்டமைப்பு உருவாக்கம். இந்தியா-மத்திய கிழக்கு -ஐரோப்பிய பொருளாதார வழித்தட திட்டம் அறிவிப்பு.
17:: பாரம்பரிய கைவினைத் தொழிலாளர்களுக்காக ரூ.13,000 கோடியில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்.
19:: கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா. பரஸ்பரம் தூதரக அதிகாரிகள் வெளியேற இரு நாடுகளும் உத்தரவு. இருதரப்பு உறவுகள் பாதிப்பு.
21:: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உலக மருத்துவக் கல்வி கூட்டமைப்பு அங்கீகாரம். 
21:: கனடா நாட்டினருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா.

அக்டோபர்

14:: இலங்கை உள்நாட்டுப் போரின்போது இந்தியா-இலங்கை இடையே நிறுத்தப்பட்ட படகு சேவை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினம்-காங்கேசன்துறைக்கு இடையே தொடங்கப்பட்டது.
20:: தில்லி-காஜியாபாத்-மீரட் இடையிலான நாட்டின் முதல் பிராந்திய அதிவிரைவுப் போக்குவரத்து வழித்தடத்தில் (ஆர்ஆர்டிஎஸ்), சாஹிபாபாத்-துஹாய் பணிமனை இடையே 17 கி.மீ. தொலைவுக்கு "நமோ பாரத்' அதிவேக ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
21:: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் "ககன்யான்' திட்ட விண்கல மாதிரியிலிருந்து அவசரகால வெளியேறும் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாகச் சோதித்து பார்த்தது.

நவம்பர்

15: மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் நாட்டில் இதுவரை சென்றடையாத மக்களைச் சென்றடையும் வகையில் "வளர்ச்சியடைந்த இந்தியா உறுதியேற்பு யாத்திரைக்கான பிரசார வாகனங்களை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார். 
24:: தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அந்த நாடு அறிவித்தது.
28:: உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவால் உத்தரகாசி சுரங்கப் பாதையில் 12-ஆம் தேதியிலிருந்து சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு 28-ஆம் தேதி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

டிசம்பர்

3:: சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது.
4::  மிஸோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது.
8:: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், மக்களவை நெறிமுறைகள் குழு அளித்த பரிந்துரையின்பேரில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
11: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
13: 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினத்தில், மக்களவையின் பார்வையாளர் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்த 2 பேர் புகைக் குப்பிகளை வீசினர். நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் இருவர் வண்ண புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். 
17: "காசி தமிழ்ச் சங்கமம்-2.0' நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தொடங்கி வைத்தார்.
21: தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, தொலைத்தொடர்பு மசோதா, பத்திரிகை பதிவு நடைமுறையை எளிதாக்கும் மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.
23: குஜராத்தை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் "எம்.வி. கெம் புளூட்டோ' எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல்.
25: ஆங்கிலேயர் கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல். 
26: பிரமோஸ் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் "ஐஎன்எஸ் இம்பால்' கடற்படையில் சேர்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com