காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்!

இளைஞர்கள் மற்றும் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காளான் வளர்ப்பு தொழிலில் அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல்
காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்!


அரியலூர்: இளைஞர்கள் மற்றும் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காளான் வளர்ப்பு தொழிலில் அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் அழகுகண்ணன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் அண்மையில் நடைபெற்ற காளான் வளர்ப்பு பயிற்சியில் அவர் தெரிவித்ததாவது:
காளான்களில் மாட்டுக் காளான், சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் ஆகிய ரகங்கள் உள்ளன. இதில் சிப்பிக் காளான் வளர்ப்பு முறையில், குழல் அமைக்கும் முறை என்பது காளான் குழல் அளவு நாம் செய்யும் உற்பத்தியைப் பொறுத்து அமைக்க வேண்டும். காளான் குழலை கிழக்கு மேற்காக அமைத்தால் வெப்பத்தை குறைக்கலாம். அதேபோல் சிறிய அளவில் சாகுபடி செய்ய தென்னங்கீற்று வேய்ந்த குழலை பயன்படுத்தலாம். குழலின் உயரம் 10 முதல் 15 அழக்கு அதிகமாக இருக்க கூடாது. காளான் குழல் கான்கிரீட்டாக இருந்தால் இரு சுவர்கள் கொண்டதாக இருக்க வேண்டும். இரு சுவர்களின் நடுவில் ஆற்று மணல் நிரப்பி விட்டிருக்க வேண்டும்.
காற்றோட்டத்திற்கு சன்னல்கள் இரண்டு அமைக்க வேண்டும். காளான் குழலை கண்டிப்பாக இரண்டு அறைகள் கொண்டதாக அமைக்க வேண்டும். ஒரு அறையை வளர்ப்பதற்காகவும் மற்றொரு அறையை படுக்கை தயார் படுத்தும் அறையாகவும் பயன்படுத்த வேண்டும்.
குழல்களில் 20-280 டிகிரி வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம், அறையின் சன்னல்களுக்கு 35 டிகிரி அளவுள்ள நைலான் வலைகளைப் பொருத்தி காளான்களைத் தாக்கக்கூடிய ஈக்கள் உட்புகா வண்ணம் தடுக்கலாம். குழலின் உட்புறம் தரையிலிருந்து குறைந்த பட்சம் அரை அடி உயரத்திற்கு ஆற்று மணல் இட வேண்டும். மேற்கண்டவாறு குழலை அமைத்து பராமரிப்பது நல்லது.
காளான் வளர்க்கும் முறையில் சில முக்கியமான நிலைகள் உள்ளன. முதலில் நன்கு சுத்தமான வைக்கோலைத் தேர்வு செய்து, அதனை குளிர்ந்த நீரில் சுமார் 4-6 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்ட வேண்டும். ஊற வைத்த வைக்கோலை 20 நிமிடம் நீராவி வெப்ப மூட்டியில் 15 இராத்தல் அளவில் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் அந்த வைக்கோலை நீரில் உலர்த்த வேண்டும் (அதாவது வைக்கொலைப் பிழியும் போது நீர் சொட்டக் கூடாது). ஆனால் வைக்கோலின் ஈரப்பதம் 60 சதவிகிதம் அளவிற்கு உலர்த்த வேண்டும். தற்பொது படுக்கை தயாரிக்க வைக்கோல் தயாராகி விட்டது.
காளான் விதை தயார் படுத்தும்போது, முதலில் நாம் தரமுள்ள காளான் விதையைத் தேர்வு செய்ய வேண்டும். காளான் விதை பொதுவாக தமிழ்நாட்டில் காளான் பண்ணைகளிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அலுவலகத்திலும் கிடைக்கும். காளான் விதையைச் சுத்தம் செய்யப்பட்ட தட்டினில் எடுத்துக் கொள்ள வெண்டும்.
காளான் விதையைக் கட்டிகள் இல்லாமல் உதிர்த்துக் கொள்ள வேண்டும். பாலித்தீன் பை தயார்படுத்தி கொள்ள வேண்டும், காளான் வைக்கோலைச் சும்மாடு' போல் சுற்ற வேண்டும் (இந்த சும்மாடு' வைக்கோல் வளையத்தின் அளவுள்ள பாலித்தீன் பையின் அளவைப் பொருத்தே இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றிய வைக்கோலை பாலித்தீன் பையின் உள்ளே வைக்க வேண்டும். சுமார் 15-20 கிராம் காளான் விதைகளை முதல் அடுக்கு வைக்கோல் மீது ஓரமாக தூவ வேண்டும்.
2ம் அடுக்காக வைக்கோலைச் சுற்றி பின் மறுபடியும் காளான் விதையை (15-20கி) படுக்கையின் ஓரங்களில் அதிகளவில் தூவ வேண்டும். மேலே குறிப்பிட்டது போல் 5 அடுக்கு வைக்கோலும் 6 அடுக்கு விதையும் இருக்குமாறு படுக்கையை தயார் செய்ய வேண்டும். முடிவில் காளான் வித்துக்களுக்கும், வைக்கோலுக்கும் தொடர்பை ஏற்படுத்த நன்கு அழுத்தி பையின் மேற்புறத்தில் நூலில் கட்ட வேண்டும். பின்னர் ஒரு தொற்று நீக்கம் செய்த இரும்பு கம்பியின் மூலம் 10-12 துளைகள் இடவேண்டும். 
தற்போது தேவையான படுக்கை தயாராகி விட்டது. தயாரித்த படுக்கைகளைக் காளான் குழலில் உரி முறையில் தொங்கவிட்டு பராமரிக்க வேண்டும். காளான் படுக்கைகளை காளான் வளர்ப்புக்கென்று தயார் செய்த அறையில் வைத்து தகுந்த நேர்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வெண்டும். அதன்பிறகு நான்கு கட்டங்களாக அறுவடை செய்யலாம். ஆக மொத்தம் ஒரு படுக்கையிலிருந்து (45 நாட்களுக்குள்) 700 கிராம் முதல் 1 கிலோ வரை காளான் கிடைக்கும். எனவே காளான் வளர்ப்பு தொழிலில் மேற்கொண்ட வழிமுறைகளை தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com