கருப்புப் பணத்தை மாற்றிய விவகாரம்: ஜனார்த்தன ரெட்டிக்கு உதவியதாக அரசு அதிகாரி மீது வழக்குப் பதிவு

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு கருப்புப் பணத்தை மாற்ற உதவிய அரசு அதிகாரி பீமாநாயக் மற்றும் அவரது வீட்டு கார் ஓட்டுநர் முகமது மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு கருப்புப் பணத்தை மாற்ற உதவிய அரசு அதிகாரி பீமாநாயக் மற்றும் அவரது வீட்டு கார் ஓட்டுநர் முகமது மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், மத்தூர் வட்டம், காடுகொத்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.சி.ரமேஷ். இவர், பெங்களூரில் மாநில அரசின் சிறப்பு நிதி கையகப்படுத்தல் அதிகாரியாகப் பணியாற்றிவரும் பீமாநாயக்கின் அலுவலக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
 இந்த நிலையில், மத்தூரில் உள்ள சம்ருத் தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து புதன்கிழமை விடுதியில் சோதனை நடத்திய போலீஸார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
 மேலும், அவர் தற்கொலை செய்துகொண்ட அறையில் இருந்து 11 பக்கங்கள் கொண்ட
 கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் கர்நாடக ஆட்சிப் பணி (கேஏஸ்)அதிகாரியான பீமாநாயக்கின் அலுவலக ஓட்டுநராகப் பணியாற்றியதால், அவருடன் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
 பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரம்மணியின் திருமணத்திற்காக அவருக்கு ரூ.100 கோடிக்கு கருப்புப் பணத்தை 20 சதம் கமிஷன் பெற்று மாற்றித் தந்தார். இவருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
 பீமாநாயக், பணத்திற்காக 19 வகையான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதில் முக்கியமானது பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தந்தது. அக்.28-ஆம் தேதி பெல்லாரியில் உள்ள பாரிஜாதா விருந்தினர் மாளிகையில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பாஜக எம்பி ஸ்ரீராமுலு ஆகியோரைச் சந்தித்து பேசினார்.
 2018-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹகரிபொம்மனஹள்ளி தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு பீமாநாயக் கேட்டுக் கொண்டார். அதற்கு கைமாறாக ரூ.25 கோடி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
 அதன்பிறகு, நவ.15-ஆம் தேதி பெங்களூரில் உள்ள உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் வைத்து ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்திற்காக ஸ்ரீராமுலுவிடம் ரூ.25 கோடி கொடுத்தார். அங்கு அடிக்கடி சென்றுவர ஓஅ05 ஙப4449 மற்றும் ஓஅ03 ஙம 8964 கார்களை பயன்படுத்தினார்.
 ரூ.100 கோடி மதிப்புள்ள 500, 1000 ரூபாய்களை புதிய 50,100,2000 ரூபாய் நோட்டுகளை 20 சதம் கமிஷன் பெற்றுக்கொண்டு மாற்றித்தந்தார். இந்தவிவகாரம் அனைத்தும் எனக்கு தெரியும் என்பதால், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக பீமாநாயக் மிரட்டினார்.
 இதுதவிர, பீமாநாயக் சேர்த்துள்ள அனைத்து சொத்து விவரங்களையும் ரமேஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை பீமாநாயக்கும், அவரதுவீட்டு ஓட்டுநர் முகமதுவும் கொலை மிரட்டல் விடுத்ததால், தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 கடந்த 3 மாதங்களாக தனது ஊதியத்தை கொடுக்காமல் அலைக்கழித்ததாகவும் ரமேஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தவிவகாரம் தொடர்பாக பீமாநாயக் மற்றும் முகமதுவுக்கு எதிராக வழக்குப் பதிந்த போலீஸார், பீமாநாயக்கை தடுப்புக்காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com