கோடையில் உணவுக் கட்டுப்பாடு அவசியம்: சுகாதாரத் துறை

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உணவு வகையில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அவசியம் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோடையில் உணவுக் கட்டுப்பாடு அவசியம்: சுகாதாரத் துறை

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உணவு வகையில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அவசியம் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தகிப்பு தாங்க முடியாமல் கொப்பள் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் இறந்துவிட்டார். இந்த நிலையில், கோடை வெப்பத்தை எதிர்கொள்ளவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோடையில் மக்கள் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்திருக்கும் சுகாதாரத் துறை, அதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, மக்களிடையே பிரசாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் நகல் மாவட்ட சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், நிர்வாக மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நட்ராஜ் கூறுகையில், தட்பவெப்பம் உயர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் எந்தவகையான உணவை உட்கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

நீர்ச்சத்து குறைபாடு, அமிலத்தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் உடல் நலன் பாதிக்கப்படும். இந்த சூழலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம்.

மதுபானம் அருந்துவதால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மதுபானத்தை முழுமையாக தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். உடல்நலனை கருத்தில் கொண்டு இறைச்சியை உண்பது உள்ளிட்ட தவறான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மக்கள் விடுபட வேண்டும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், மருத்துவப் பிரச்னைகளால் அவதிப்படுவோர் கோடையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் டேங்கர் லாரி மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரத்தை சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்ணீரில் குளோரின் கலந்துள்ளதா என்பதை சோதித்தறிய கேட்டுக் கொண்டுள்ளோம். நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட கோடை கால மருத்துவப் பிரச்னைகளால் அவதியுறும் மக்களுக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்திருக்கவும் மாவட்ட சுகாதார அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

பெங்களூரைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் சுமித்ரா கூறுகையில், கோடையில் குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்புகிறார்கள். இதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்காக ஓஆர்எஸ் குடிக்கலாம். அதிக அளவில் தண்ணீரை பருக வேண்டும். மசாலா உணவுகள், சர்க்கரை கலந்துள்ள குளிர்பானங்கள், சோடா கலந்த பானங்கள், கஃபீன் சேர்த்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக பழச்சாறு மற்றும் தண்ணீரை அதிகம் பருகலாம். பழம் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணலாம் என்றார்.

தளர்வான, வெளிர்நிற, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். ஷூக்கள் அணிவதை தவிர்த்து செருப்புகளை அணிந்தால் அது காலின் சுவாசத்திற்கு உதவியாக இருக்கும். நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீர், மோர், தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும்.

விளைநிலங்களில் பணியாற்றுவோ அதிகளவில் தண்ணீர் பருகவேண்டும். உடல் சோர்வடைந்தால் ஓஆர்எஸ் கரைசலை குடிக்கலாம். அதிகளவில் வியர்த்தால் பருத்தி துணி அல்லது மென்காகிதத்தால் துடைக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இறுக்கமான, அடர்நிற ஆடைகளை அணிவது, குஷன் இருக்கைகளில் உட்கார்ந்திருப்பது, கஃபீன், கார்பனேட்டட் குளிர்பானங்களை அருந்துவது, உயர் சர்க்கரை அளவு கொண்ட குளிர்பானங்களை குடிப்பது, மசாலா உணவை உட்கொள்வது மற்றும் மதுபானம், இறைச்சியை உட்கொள்வது போன்றவை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?: தோல் சிவந்தால், வியர்த்தல் குறைந்தால், உடல் சூடு அதிகரித்தால்,சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வெப்பத்தால் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி: செருப்பு, ஷூக்களை கழற்றி, ஆடைகளை தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டோரின் உடல்மீது குளிர்நீரை தெளிக்க வேண்டும். குளுமையான இடத்திற்கு மாற்ற வேண்டும். மருந்து எதையும் தரக் கூடாது. பாதிக்கப்பட்டோரை அதிகம்பேர் சூழ்ந்திருக்கக் கூடாது. பாதிக்கப்பட்டோரின் உடலை உடனடியாக குளிர்ச்சியாக்கக் கூடாது. உடனடியாக மருத்துவரை அல்லது 108 தொலைபேசி எண்ணை அணுகலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com