காணொளிக் காட்சியை வெளியிட்டார் பாம் நாகராஜ்: அரசியல் தலைவர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாம்

பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாம் நாகராஜ் காணொளிக் காட்சியை வெளியிட்டு, பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியிருக்கிறார்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்தது, ஆள்கடத்தலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவரும், ரெளடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பாம் நாகராஜ் கடந்த ஏப்.14-ஆம் தேதி முதல் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி தலைமறைவாக பதுங்கியிருக்கிறார். இவர் திடீரென சனிக்கிழமை தனது வழக்குரைஞர்கள் மூலம் காணொளிக் காட்சி (விடியோ) பதிவை குறுந்தகடுகளில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த காணொளிக் காட்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது அதிர்ச்சி தரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
முதல்வர் சித்தராமையாவின் சிறப்பு உதவியாளர் மஞ்சுநாத், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் தினேஷ்குண்டுராவ், பாஜக எம்.பி. பி.சி.மோகன், பெயர் குறிப்பிடாமல் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை தனது காணொளிக் காட்சி உரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒருமணி நேரம் நீளும் காணொளிக் காட்சியில் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றும்படி பல அரசியல்வாதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறியிருக்கிறார். தன்மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு காவல் துறைக்கு சவால் விட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பின்னப்பட்டது என்றும், ஏப்.14-ஆம் தேதி தன் வீட்டை சோதிப்பதாக கூறிவந்தபோது தன்னை என்கவுன்ட்
டரில் கொலை செய்ய காவல் துறை திட்டமிட்டிருந்தது என்றும், அதற்காக ரூ.10 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு எதிராக சதி செய்திருப்பதாகவும், 2018-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடக் கூடாது என்பதற்காக தன் மீது பொய் வழக்கு போட்டிருப்பதாகவும், இதில் உண்மையை அறிந்துகொள்ள இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார். இந்த காணொளிக் காட்சிப் பதிவு காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகுந்த நடவடிக்கை
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் கூறியது: பாம் நாகராஜின் காணொளிக் காட்சிப் பதிவு குறித்து காவல் துறை ஆராய்ந்து வருகிறார்கள். நாகராஜை முதலில் கைது செய்ய காவல் துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன்பிறகு அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தில் சட்டப்படியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
மஞ்சுநாத் யார்?
முதல்வர் சித்தராமையா கூறியது: பாம் நாகராஜுக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? என்னிடம் சிறப்பு உதவியாளராக மஞ்சுநாத் என்று யாரும் இல்லை. எனவே, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். உண்மையை ஆராய்ந்த பிறகே கேள்வி கேட்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com