பாஜக தலைவர் அமித் ஷா இன்று கர்நாடகம் வருகை

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான செயல் திட்டம் வகுப்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று கர்நாடகம் வருகிறார்.
பாஜக தலைவர் அமித் ஷா இன்று கர்நாடகம் வருகை

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான செயல் திட்டம் வகுப்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று கர்நாடகம் வருகிறார்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான களப் பணிகளில் அக் கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவிருக்கும் பாஜக, 150 தொகுதிகளைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எனவே, வேட்பாளர்களாக நிறுத்தத் தகுதியானவர்களைக் கண்டறிவதற்காக ஏற்கெனவே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தனித்தனியே கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பு மற்றும் நிர்வாகிகளின் கருத்தறிந்து வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை முன்கூட்டியே முடிவு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கர்நாடக பாஜக மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்யவும் காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்ளவும் பின்பற்ற வேண்டிய தேர்தல் வியூகம், பிரசார வியூகம், பிரதமர் மோடியின் செல்வாக்கை முறைப்படி பயன்படுத்த அவரின் பிரசாரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளிடையே விவாதிப்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சனிக்கிழமை கர்நாடகம் வருகிறார்.

பெங்களூருக்கு விமானம் மூலம் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு வரும் அமித் ஷாவுக்கு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு காலை 11.50 மணிக்கு செல்கிறார். மாநில அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள நூலகத்தை அமித் ஷா திறந்து வைக்கிறார்.

கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தலைவர்கள், செயலாளர்கள், அணித் தலைவர்கள், அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதைத் தொடர்ந்து, பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்எல்சிக்களின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து, ஐந்து நட்சத்திர உணவகத்தில் நடக்கவிருக்கும் அறிவுஜீவிகள், முன்னோடிகள், சாதனையாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசுகிறார். ஆக.13-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கட்சி அலுவலகத்தில் நடக்கவிருக்கும் அரசியல் விவகாரங்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக் கூட்டத்தை முடித்துக் கொண்டு மண்டியா மாவட்டத்திற்குச் சென்று ஆதிசுன்சுனகிரி மடத்தில் அதன் பீடாதிபதி நிர்மலானந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெறுகிறார்.

அதன்பிறகு பெங்களூரு திரும்பும் அமித் ஷா, கட்சியின் பல்வேறு திட்டங்கள், துறைகளின் அமைப்பாளர்களின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இக் கூட்டத்தின் முடிவில் வாழும் கலை ஆஸ்ரமம் சென்று அதன் மடாதிபதி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜியை சந்தித்து ஆசி பெறுகிறார்.

ஆக.14-ஆம் தேதி (திங்கள்கிழமை) கட்சி அலுவலகத்தில் கட்சியின் விரிவாக்கப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளின் நிர்வாகிகள், ஊடகம் மற்றும் சமூக ஊடக அணியினர், கட்சியில் அண்மையில் சேர்ந்தோர், தனித்தனியே தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பெங்களூரிலிருந்து புறப்படுகிறார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com