கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும்

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பெல்லாரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தாலும், கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெறாது.
காங்கிரஸ் கடந்த நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன. மாநில அரசின் சாதனைகள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உதவும்.
லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் கொண்ட குழுவினர் என்னைச் சந்தித்து, லிங்காயத்து சமுதாயத்தினருக்கு தனி மதம் என்ற அங்கீகாரத்தை வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து மாநில அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. லிங்காயத்து தனி மதக் கோரிக்கைக்கு நான் தான் காரணம் என்பதுபோல ஒருசிலர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. எனவே, வறட்சியால் தவித்து வரும் மாவட்டங்களில் செயற்கை மழையை பொழியவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசில் காலியாக இருக்கும் அமைச்சர் பதவிகள் வெகுவிரைவில் பூர்த்தி செய்யப்படும். யாரை அமைச்சராக நியமிப்பது என்பதை கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும்.
பிரதமர் நரேந்திர மோடி 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறியிருந்தார். பிரதமர் மோடியின் திட்டம் இன்னும் ஏட்டிலேயே உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாய்க்கு வந்தபடி பேசுவாரே அல்லாமல், அவரது சாதனை என்று கூற எதுவுமில்லை. பிரதமர் மோடிக்கு ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். ஆனால், தொழிலதிபர்களை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறார் என்றார் சித்தராமையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com