கோ-ஆப்டெக்ஸில் பாரம்பரிய பட்டுச் சேலை கண்காட்சி: இன்றும் நாளையும் நடக்கிறது

பெங்களூரில் இருநாள்களுக்கு கோ-ஆப்டெக்ஸின் பாரம்பரிய பட்டுச்சேலை கண்காட்சி நடைபெறுகிறது.

பெங்களூரில் இருநாள்களுக்கு கோ-ஆப்டெக்ஸின் பாரம்பரிய பட்டுச்சேலை கண்காட்சி நடைபெறுகிறது.
பெங்களூரு, காந்தி பஜார் சாலையில் பி.என்.எஸ். அரங்கத்தில் சனிக்கிழமை கோ-ஆப்டெக்ஸின் பண்டிகைக் கால பாரம்பரிய கைத்தறி பட்டுச்சேலை கண்காட்சியை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வெங்கடேசன் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம் கூறியது: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரிசையாக காத்திருக்கின்றன.
இந்த சமயத்தில் இந்திய பண்பாட்டின்படி பட்டுச்சேலைகளை அணிய வேண்டுமென நமது குடும்பப் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் நினைப்பது வழக்கம். அதை மனதில் வைத்து வெவ்வேறு வகையான கைத்தறி பட்டுச்சேலைகளை அறிமுகம் செய்திருக்கிறோம்.
வெள்ளி மீது தங்கம் பூசப்பட்ட தூய்மையான ஜரிகை மற்றும் பட்டு கொண்ட காஞ்சிபுரம் சேலைகளில் பல புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
சென்னையில் உள்ள கலாúக்ஷத்ராவில் ருக்மணி அருண்டேல் சுயமாக வடிவமைத்து தயாரித்த சேலைகளை அணிந்திருந்தார். மயில், மான், ருத்ராட்சை பொறிக்கப்பட்ட கலைநயமிகுந்த அந்த சேலைகளின் 14 வடிவமைப்புகளை மறுபதிக்காக கொண்டு வந்திருக்கிறோம். திருமணப் பட்டு என்று அழைக்கப்படும் கூரைநாட்டு பட்டுச் சேலைகளை புதுமையான அழகியலோடு அறிமுகம் செய்திருக்கிறோம். இதில் பட்டும், பருத்தியும் 2-க்கு 3 பங்கில் கலந்திருக்கும். செட்டிநாட்டு பெண்கள் அணிந்திருந்த சேலைகளை மீண்டும் கொண்டு வந்திருக்கிறோம். இவை மென்மையான இழைகளால் உருவாக்கப்பட்ட 100 சதவீத பருத்தி சேலைகளாகும். இதேபோல, காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளில் காணப்படும் அழகியலை பருத்தி சேலையில் கொண்டு வந்து அதை காஞ்சி பருத்தி சேலையாக அறிமுகம் செய்திருக்கிறோம். 1,000 மயில் சக்கரங்கள் பதிந்த பரமக்குடி பருத்தி சேலைகள் இளம்பெண்களை கண்டிப்பாக ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
இதில் புதினம் என்ற சேலையையும் அறிமுகம் செய்துள்ளோம். வளையங்களாலான புள்ளிகள் பதிக்கப்பட்ட சுங்குடி சேலைகளில் புதிய ரகங்களை கொண்டு வந்திருக்கிறோம்.
இயற்கை வேளாண்முறையில் விளைவிக்கப்பட்ட தூய பருத்திசேலைகள் இளம்பெண்களை கவர்ந்திருக்கும் அழகியல் கொண்டதாகும். யானைகள், கோபுரங்கள், தாமரை பொறித்தது மட்டுமல்லாது, நவீன அழகியல் கலைகளைக் கொண்ட இந்த சேலைகள் நெகமம், வனவாசி, திண்டுக்கல், மனமேடு ஆகிய நகரங்களில் நெய்யப்படுகின்றன. பாரம்பரியமாக தமிழ்ப் பெண்கள் உடுத்திவரும் சின்னாளப்பட்டி சேலைகள், கோவை கோரா பட்டுச் சேலைகள், காஞ்சி, ஆரணி, சேலம், கோவை மென்பட்டுச் சேலைகள், தங்கநாணய சேலைகள் கண்காட்சியில் சிறப்பு அம்சங்களாக விளங்கும்.
கோ-ஆப்டெக்ஸின் அனைத்து சேலைகள் மீதும் கைத்தறி, பட்டு சின்னங்களோடு நெசவாளரின் பெயர், வயது, நெய்ய எடுத்துக்கொண்ட நாள் மற்றும் அதற்கான மனித உழைப்பை குறிக்கும் அட்டையும் இடம்பெற்றிருக்கும். தனது சேலையை நெய்தவரை நினைவுக்கூரவும், அவருக்கு அங்கீகாரம் வழங்கவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் சேலைகளில், பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவர பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆக.13, 14ஆகிய இருநாள்களுக்கு நடக்கும் இக்கண்காட்சியில் புதிய ரகங்களை வாங்கும் வாய்ப்பு அளிப்பதோடு, அனைத்து சேலைகள் மீதும் 30 சதவீத தள்ளுபடியையும் தருகிறோம். ரூ.900-இல் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான சேலைகள் விற்பனைக்கு உள்ளன. கர்நாடகத்தில் உள்ள 13 அங்காடிகளிலும் இந்த சேலைகளை பெற்றுக்கொள்ளலாம். இது இந்த தீபாவளி வரை தொடரும்.
கோ-ஆப்டெக்ஸின் கடந்தாண்டு விற்பனை ரூ.315 கோடியாகும். நிகழாண்டில் இது ரூ.350 கோடியாக இருக்கும். கர்நாடகத்தில் கடந்தாண்டு விற்பனை ரூ.16 கோடியாக இருந்ததை, ரூ.20 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
பட்டுப்புழுக்களை கொல்லாமல் இயற்கையான முறையில் பட்டிழைகளை அவிழ்த்து உருவாக்கப்படும் சேலைகளை 'அகிம்சா சேலைகள்' என்ற பெயரில் தீபாவளிக்கு அறிமுகம் செய்யவிருக்கிறோம். எங்கள் பட்டுச் சேலைகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள 1,181 பட்டுச்சேலை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெய்து, பெற்றுவருகிறோம் என்றார் அவர்.
அப்போது கர்நாடக மண்டல முதுநிலை மேலாளர் ஜி.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com