மக்கள் உரிமைகளைப் பெற்றுத்தர தனி அமைப்பு: நடிகர் உபேந்திரா அறிவிப்பு

மக்கள் உரிமைகளை பெற்றுத்தர தனி அமைப்பு தொடங்குவேன் என நடிகர் உபேந்திரா அறிவித்துள்ளார்.

மக்கள் உரிமைகளை பெற்றுத்தர தனி அமைப்பு தொடங்குவேன் என நடிகர் உபேந்திரா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தர 'பிரஜாகியா' என்ற அமைப்பை தொடங்க இருக்கிறேன். பணபலம், தோள்பலம், ஜாதிபலம் எதுவும் இல்லாமல் அரசியல் நடத்த முற்பட்டுள்ளேன். எனது தத்துவங்களில் ஈடுபாடுகொண்டோர் எனது அமைப்பில் சேரலாம். நான் மக்கள் தலைவனும் அல்ல, மக்கள் சேவகனும் அல்ல. மாறாக, நான் ஒரு தொழிலாளி. மக்களின் நன்மைக்காக பாடுபடுபவன். என்னோடு கைசேர்ப்பவர்கள் இதுபோன்ற மனநிலையை பெற்றிருக்க வேண்டும்.
எனது அமைப்பில் காதி ஆடைக்கு பதிலாக காக்கி உடை அணிய வேண்டும். காக்கி ஆடை உழைப்பின் அடையாளம் என்பதால் அதை தேர்ந்தெடுத்தேன்.
ஜனநாயகத்தில் மக்களே தலைவர்கள். ஆனால் இங்கு அரசியல்வாதிகள் தலைவர்களாக இருக்கிறார்கள்.
மக்களிடம் வசூலிக்கும் ஒவ்வொரு வரிக்கும் அரசியல் தலைவர்கள் கணக்கு காட்ட வேண்டும். சுயநலம் மற்றும் பாரபட்சம் இல்லா அரசாட்சியை வழங்குவதற்காக அரசியல் கட்சியைத் தொடங்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். என்னோடு மக்கள் சேர்ந்தபிறகு, அவர்களின் கருத்தறிந்து முடிவுசெய்வேன்.
ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு வகையான பிரச்னை இருக்கும். அவற்றுக்கு தனித்தனியே தீர்வு காணப்படும். இந்த பிரச்னையைத் தீர்க்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம். ஒருபைசா இல்லாமல் கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபடவேண்டுமென்பது எனது ஆவலாகும். மக்களிடம் கையேந்தி பணம் சேகரித்து கட்சியை தொடங்கலாம் என்றிருக்கிறேன். ஊழல் இல்லாத நியாயமான ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எனது ஆசையாகும்.
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க அரசியல்வாதிகள் முன்வரவில்லை. எனவே, மக்கள் பிரச்னைகளை குறைக்கவே தற்போது 'பிரஜாகியா' என்ற அமைப்பை தொடங்கியுள்ளேன். முழுநேரம் அரசியலில் ஈடுபட முடிவுசெய்துள்ளதால், திரைப்படங்களில் இருந்து விலகுகிறேன். எனது முயற்சிக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com