அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கு உள்பட்டவை: கர்நாடக தகவல் ஆணையம்

அரசு நிதியுதவி பெறும் அனைத்து நிறுவனங்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் உள்பட்டவையே என்று கர்நாடக தகவல் ஆணையம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அரசு நிதியுதவி பெறும் அனைத்து நிறுவனங்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் உள்பட்டவையே என்று கர்நாடக தகவல் ஆணையம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
 கர்நாடக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் செயல்பாடுகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்குமாறு 2016, ஏப்.24-ஆம் தேதி தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி மனு அளித்திருந்தார். அந்த மனுவில்,கர்நாடக சித்ரகலா பரிஷத் மற்றும் அதன் நுண்கலை கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்திக் கொண்டிருப்போர் பட்டியல், அந்த பணியாளர்களின் பெயர், பதவி, அதிகாரம், கடமைகள், பணி நியமன நடைமுறைகள், அந்த பணியை மேற்கொண்ட அமைக்கப்பட்ட தேர்வுக்குழு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரங்கள், அந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் மற்றும் 2013-ஆம் ஆண்டு அவர்களின் மாத ஊதியம் ஆண்டுவாரியாக அளிக்கும்படி கேட்டிருந்தார்.
 இது அரசு நடத்தும் அல்லது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்ல என்பதால், இந்நிறுவனம் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் வரம்புக்குள் வராது என மனுதாரர் கேட்ட தகவல்களைத் தர கர்நாடக சித்ரகலா பரிஷத் மறுத்துவிட்டது.
 இதற்கு எதிராக கர்நாடக தகவல் ஆணையத்தில் மனுதாரர் டி.நரசிம்மமூர்த்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்தமனுவை விசாரித்த கர்நாடக தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர் என்.பி.ரமேஷ் ஆக.9-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், மாநில அரசு மற்றும் வேறு சில அரசு நிறுவனங்களிடம் இருந்து பகுதியாகவும், மொத்தமாகவும் நிதி ஆதாரங்களை கர்நாடக சித்ரகலா பரிஷத் பெற்றுள்ளது. கட்டடம் கட்டுவது போன்ற மூலதன செலவினங்கள், மாத ஊதியம் அளிப்பது போன்ற வருவாய் செலவினங்களுக்கும் நிதி உதவிபெறப்பட்டுள்ளது.
 கர்நாடக சித்ரகலா பரிஷத், அரசுசாரா அமைப்பாக இருப்பதால் இந்நிறுவனம் அரசின் சட்டக் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டாலும், அரசின் நிதி ஆதாரங்களைமுழுமையாக பெற்றுக் கொண்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டப் பிரிவு 2(எச்)(டி)(2)-இன்படி அரசு மற்றும் உறுப்பு அமைப்புகளிடம் இருந்து இருந்து நிதியுதவிகளைப் பெற்றுள்ளதால், கர்நாடக சித்ரகலா பரிஷத் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் வரம்புக்குள் வந்துவிடுகிறது.
 அரசின் நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அரசின் நிதியுதவியைப் பெற்றிருந்தால், அப்படிப்பட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் தகவலறியும் உரிமைச்சட்டப்பிரிவு 2(எச்)(டி)(2)-இன்படி தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டதாகும்.
 எனவே, கர்நாடக சித்ரகலா பரிஷத்தை தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் பெற தகுதியான பொது நிறுவனமாக அறிவிக்கப்படுகிறது.
 மேலும், மனுதாரர் கேட்டிருக்கும் தகவல்களை அளிக்க கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் பொதுச் செயலாளரை தகவல் அதிகாரியாக நியமித்து, மனுதாரருக்குத் தகவல்களை அளிக்க உத்தரவிடப்படுகிறது.
 மேலும் இந்தத் தகவல்களுடன் பொதுச்செயலாளர் அடுத்த விசாரணையின்போது கர்நாடக தகவல் ஆணையத்தில் ஆஜராக வேண்டும். இந்தவழக்கின் அடுத்த விசாரணையை 2017 டிச.15-ஆம் தேதிமாலை 3 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com