புதிய கல்வி முறைக்கு எதிராக தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

புதிய கல்விமுறைக்கு எதிராக விஸ்வேஷ்வரையா தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதிய கல்விமுறைக்கு எதிராக விஸ்வேஷ்வரையா தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
 கர்நாடகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் விஸ்வேஷ்வரைய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (விடியூ), 2015-16-ஆம் ஆண்டு முதல் மாணவர் விருப்பப் பாட திட்டத்தை (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்துள்ளது.
 இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குளறுபடிகளால் மாணவர்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை கண்டித்து விடியூ மாணவர் போராட்டக்குழு மற்றும் அகில இந்திய ஜனநயக மாணவர் அமைப்பினர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து கே.ஆர்.சதுக்கம் வரையில் கண்டன ஊர்வலம் நடத்தியதோடு, பல்கலைக்கழக விஸ்வேஷ்வரையா பொறியியல் கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கூட்டத்தில் கன்னட எழுத்தாளர் பேராசிரியர் பி.வி.நாராயணன் பேசியது: விஸ்வேஷ்வரையா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் சிபிசிஎஸ் கல்வி முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாணவர்கள் விரும்பும் மூன்று வகையான பாட பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
 இந்தத் திட்டம் செமஸ்டர் பருவமுறையில் அமல்படுத்தப்படுகிறது. 2014-15-ஆம் கல்வியாண்டுக்கு முன்பு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் 2010-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த பாடத் திட்டத்தின்கீழ் பயின்றுவருகிறார்கள். 5-ஆவது செமஸ்டரில் இருந்து இந்த மாணவர்கள் புதிய முறையைப் பின்பற்ற வேண்டும்.
 ஆனால், முதல் நான்கு செமஸ்டர்களை பழைய கல்வி முறையில் படிக்க வேண்டும். இது மாணவர்களிடையே குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளதோடு, பொறியாளர்களின் கற்கும் திறன், செயல்திறன்களை மழுங்கடிக்க செய்கிறது. நான்காவது செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை ஐந்தாவது செமஸ்டர் தேர்வெழுதும் நாளன்று வெளியிடுகிறார்கள்.
 நான்காவது செமஸ்டரில் தோல்வியடைந்த பாடங்களுக்கான தேர்வுகளையும் அதே நாளில் எழுத நேரிட்ட அவலமும் நடந்தது. பழைய கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு புதிய சிபிசிஎஸ் கல்விமுறை குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்கள்.
 இதை எந்தவொரு கல்லூரியும் செயல்படுத்தவில்லை. இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் குழம்பியுள்ளனர். எனவே, சிபிசிஎஸ் கல்விமுறையை பயிலாத மாணவர்களைத் தேர்வில் தோல்வி அடைய செய்யக் கூடாது. சிபிசிஎஸ் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளை வைக்க வேண்டும். சிபிசிஎஸ் கல்வி முறை தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிட வேண்டும். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர்கள் போராட்டத்தை கைவிடக் கூடாது என்றார்.
 இந்த கூட்டத்திற்கு அகில இந்திய ஜனநயக மானவர் அமைப்பு துணைத் தலைவர் பி.பி.ரவிநந்தன், அகில இந்திய கல்வி பாதுகாப்புக் குழு கர்நாடக கிளை செயலாளர் கே.உமா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com