மைசூரு பட்டத்து இளவரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது

மைசூரு உடையார் மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசி திரிஷிகாகுமாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மைசூரு உடையார் மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசி திரிஷிகாகுமாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
 மைசூரு மாகாணத்தை ஆண்ட உடையார் மன்னர் குடும்பத்தின் 27-ஆவது வாரிசான பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையாருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பட்டத்து இளவரசி திரிஷிகாகுமாரிக்கும் 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
 இந்த நிலையில், மைசூரில் உள்ள அரண்மனையில் அக்.1-ஆம் தேதி திரிஷிகாகுமாரிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் மற்றும் திரிஷிகாகுமாரி இருவரும் பெங்களூரில் உள்ள அரண்மனையில் வாழ்ந்து வருகிறார்கள். திரிஷிகாகுமாரிக்கு புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு இந்திராநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திரிஷிகாகுமாரி அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை நள்ளிரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
 மைசூரு உடையார் மன்னர் குடும்பத்துக்கு சட்டப்படியான அதிகாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், மைசூரு, மண்டியா, சாமராஜ்நகர் மாவட்டங்களை உள்ளடக்கிய பழைய மைசூரு மாகாணத்தில் உள்ள மக்கள் இன்றைக்கும் மன்னர் குடும்பத்தின் மீது ஈடுபாடு கொண்டுள்ளனர்.
 1610-ஆம் ஆண்டு மைசூரு மாகாணத்தை ஆண்டுவந்த ராஜா உடையார், விஜயநகர பேரரசின் அங்கமாக விளங்கிய ஸ்ரீரங்கப்பட்டணா மீது போர்தொடுத்தார்.
 அங்கு தளபதியாக இருந்த ஸ்ரீரங்கராயாவின் மனைவி அலமேலு அம்மாள், ரங்கநாயகி அம்மனின் தீவிரபக்தையாக இருந்தார்.
 போரில் தோல்வி அடைந்த பிறகு ரங்கநாயகிக்கு சூட்டிவந்த ஆபரணங்களுடன் தலைக்காடுவில் தஞ்சம் அடைந்திருந்தார்.
 அங்கு சென்ற ராஜா உடையார், அலமேலு அம்மாளிடம் இருந்து ஆபரணங்களை பறித்துவந்தார். இதனால் ஆத்திரமடைந்த அலமேலு அம்மாள், ராஜா உடையாரின் வம்சம் அழியக்கடவது (குழந்தை பாக்கியம் இருக்கக்கூடாது) என்று சாபமிட்டுவிட்டு காவிரி ஆற்றில் குதித்துதற்கொலை செய்துகொண்டாராம்.
 அதன்பிறகு, பதவிவகித்த மன்னர்களில் யாரும் ராஜா உடையாரின் நேரடி வாரிசு கிடையாது. தத்து எடுத்து பட்டத்து இளவரசர்களாக முடிசூடப்பட்டு, பின்னர் மன்னர்களாக பதவிவகித்து வந்துள்ளனர்.
 மைசூரில் 1940 முதல் 1947-ஆம் ஆண்டு வரை ஆண்ட மன்னர் ஜெயசாமராஜேந்திர உடையாருக்கு மகனாக ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் 1953, பிப்.20-ஆம் தேதி பிறந்தார். இவருக்கும் பிரோமாதேவிக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
 ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மறைவுக்கு பிறகு யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தத்தெடுக்கப்பட்டார். தற்போது, யதுவீர்கிருஷ்ணதத்த சாமராஜ் உடையாருக்கும் திரிஷிகாகுமாரிக்கும் குழந்தை பிறந்துள்ளதால், மன்னர் குடும்பம் மற்றும் மைசூரு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com