40 ஆண்டுகளுக்குப் பின்னர் 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் முதல் முதல்வர்!

கர்நாடக அரசியலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும் முதல் முதல்வராக சித்தராமையா உருவெடுக்கவிருக்கிறார்.
40 ஆண்டுகளுக்குப் பின்னர் 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் முதல் முதல்வர்!

கர்நாடக அரசியலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும் முதல் முதல்வராக சித்தராமையா உருவெடுக்கவிருக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் கர்நாடகத்தில் முதல்வர் பதவியை 22 பேர் வகித்துள்ளனர். இவர்களில் தேவராஜ் அர்ஸ் (7 ஆண்டுகள்- 234 நாள்கள்) அதிக காலம் முதல்வராக இருந்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக எஸ்.நிஜலிங்கப்பா (7 ஆண்டுகள்- 174 நாள்கள்), ராமகிருஷ்ண ஹெக்டே (5 ஆண்டுகள்-142 நாள்கள்), எஸ்.எம்.கிருஷ்ணா (4 ஆண்டுகள்- 230 நாள்கள்), கே.சி.ரெட்டி (4 ஆண்டுகள்- 157 நாள்கள்), கெங்கல் ஹனுமந்தையா (4 ஆண்டுகள்- 142 நாள்கள்) ஆகியோர் முதல்வர் பதவியில் இருந்துள்ளனர்.

இவர்களில் தொடர்ச்சியாக 5 ஆண்டு காலம் முதல்வர் பதவியில் தேவராஜ் அர்ஸ், எஸ்.நிஜலிங்கப்பா ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். ராமகிருஷ்ண ஹெக்டே 5 ஆண்டு காலம் பதவியில் இருந்தாலும், தொடர்ச்சியாக அவருக்கு பதவி இருக்கவில்லை. 

கர்நாடகத்தை ஆண்ட 22 முதல்வர்களில் 20 பேர் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கியுள்ள 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது ஜனநாயகத்தின் நகைமுரண் என்றே கூற வேண்டும்.

அரசியல் நிலையில்லாமையே காரணம்?
நாடு சுதந்திரம் அடைந்ததும் கர்நாடகத்தின் முதல் முதல்வராக பதவியேற்ற கே.சி.ரெட்டி, முதல்முறையாக 1952-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், கெங்கல் ஹனுமந்தையாவுக்கு ஆதரவாக பதவி விலகினார்.

இதன்பின்னர், கெங்கல் ஹனுமந்தையா, விதான செüதா கட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஐந்தாண்டு காலத்துக்கு முன்பாகவே பதவி விலக நேர்ந்தது. 

இதன்பிறகு முதல்வர்களாகப் பொறுப்பேற்ற எஸ்.நிஜலிங்கப்பா, பி.டி.ஜட்டி, எஸ்.ஆர்.கந்தி, வீரேந்திர பாட்டீல் ஆகியோர் வெவ்வேறு காரணங்களால் குறுகிய காலம் மட்டுமே முதல்வர்களாக நீடித்தனர். கர்நாடக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நிலவிய நிலையாமையே இந்த நிலைக்கு காரணமாகும். 

தேவராஜ் அர்ஸும், நிஜலிங்கப்பாவும்...: அரசியல் குழப்பங்களால் 1971-ஆம் ஆண்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்த பின்னர், ஓராண்டு கழித்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. அப்போது முதல்வராகப் பதவியேற்ற தேவராஜ் அர்ஸ் தான், எஸ்.நிஜலிங்கப்பாவுக்கு பின்னர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பதவிவகித்த முதல்வராக உருவெடுத்தார்.

காங்கிரஸ் இரண்டாக உடைந்ததால் தேவராஜ் அர்ஸ் கட்சியில் இருந்து விலகியதையடுத்து, வீரேந்திர பாட்டீல், ஆர்.குண்டுராவ் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். 

1975-ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபிறகு தோன்றிய ஜனதா கட்சியின் ஆளுமை கர்நாடகத்தில் எழுச்சி பெறத் தொடங்கியது. இதன்விளைவாக, கர்நாடகத்தில் முதல்முறையாக 1989-ஆம் ஆண்டு காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. முதல்வராகப் பொறுப்பேற்ற ராமகிருஷ்ணஹெக்டே சிறப்பாக ஆட்சி நடத்தியபோதும், அரசியல் குழப்பங்களால் இடையிடையே ஆட்சியை இழந்து, இரண்டுமுறை மீண்டும் முதல்வராகி 5 ஆண்டுகள் 142 நாள்கள் ஆட்சி நடத்தினார். 

இவருக்கு பிறகு காங்கிரஸ், ஜனதா தள ஆட்சிகள் மாறிமாறி அமைந்தபோதும், அரசியல் நிலைத்தன்மை இல்லாததால் எஸ்.ஆர்.பொம்மை, வீரேந்திரபாட்டீல், எஸ்.பங்காரப்பா, எம்.வீரப்ப மொய்லி, எச்.டி.தேவெ கெளடா, எஸ்.ஆர்.படேல் ஆகியோர் முதல்வர்களானார்கள். 

1999-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அரசின் முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா பொறுப்பேற்று 4 ஆண்டுகள் 230 நாள்கள் ஆட்சி நடத்தினார். 

உலக அளவில் நிகழ்ந்து வந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியை சரியான நேரத்தில் கர்நாடகத்துக்கு இழுத்துவந்து தொழில் வளப் புரட்சிக்கு வித்திட்டதால், இந்திய அளவில் சிறந்த ஆட்சி நடத்துவதாக எஸ்.எம்.கிருஷ்ணா பெயர்பெற்றார். காவிரி ஆற்றுநீர் பங்கீட்டு விவகாரத்தில் அரசியல் செய்து வந்ததோடு, மக்களிடையே நிலவும் நற்பெயர் மீண்டும் ஆட்சியை பிடிக்க உதவும் என்று அவர் நம்பினார். 

அதற்காக, பதவிக் காலம் முடியும்வரை காத்திராமல் முன்கூட்டியே தேர்தல் நடத்த முனைந்தார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காததால், எஸ்.எம்.கிருஷ்ணா பதவி விலகினார்.

9 ஆண்டுகள் 5 முதல்வர்கள்: இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் அரசியல் குழப்பம் உச்சத்தை தொட்டது. 2004-ஆம் ஆண்டில் தொடங்கிய அரசியல் குழப்பம் 2013-ஆம் ஆண்டு வரை நீடித்ததால், 9 ஆண்டு காலத்தில் என்.தரம்சிங், எச்.டி.குமாரசாமி, எடியூரப்பா, சதானந்த கெüடா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகிய 5 முதல்வர்கள் மாறினார்கள். 

தேவராஜ் அர்ஸ் வழியில்...: 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு அமைந்த காங்கிரஸ் அரசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற முதல்வர் சித்தராமையா, தேவராஜ் அர்ஸ் வழியில் சமூகநீதி ஆட்சி நடத்திவருவதாகக் கூறி வருகிறார். 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டு கால கர்நாடக அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தவர்களே கிடையாது. அதிகபட்சமாக 4 ஆண்டுகள், 230 நாள்கள் எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சி புரிந்தார். இந்தச் சாதனையை முறியடித்து 4 ஆண்டுகள் 233 நாள்கள் கடந்தும் எந்தவித அரசியல் குழப்பமும் இல்லாமல் முதல்வராக இருந்துவருபவர் சித்தராமையா என்பது அதிசயம்தான்.

தேவராஜ் அர்ஸ் போலவே சித்தராமையாவும் காங்கிரஸ் அரசுக்கு தலைமை வகிப்பதோடு, மைசூரை சொந்த ஊராகக் கொண்டவர். இருவரும் சமூகநீதி சிந்தனையில் ஊறித் திளைத்தவர்கள். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ஆட்சியில் முக்கியத்துவம் அளித்தவர்கள். 

1972 முதல் 1977-ஆம் ஆண்டுவரை முதல்வராக 5 ஆண்டுகள் ஆட்சி செய்த தேவராஜ், 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று மீண்டும் முதல்வரானார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் எழுந்த உள்கட்சி சண்டை, சச்சரவுகளால் 1980-ஆம் ஆண்டிலேயே பதவி விலகினார். அன்று முதல் கர்நாடகத்தில் அரசியல் குழப்பங்கள் குறைவில்லாமல் இருந்துவருகிறது. 1978-ஆம் ஆண்டுக்கு பிறகு 19 அரசுகள், 16 முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியும் நடந்துள்ளது. 

சித்தராமையாவின் சாதனையும், சோதனையும்...: கடந்த 4 ஆண்டுகள், 233 நாள்கள் ஆட்சிக் காலத்தில்தான் மதிநுட்பமான முதல்வர் என்பதை சித்தராமையா வெளிப்படுத்தியுள்ளார். கடினமான சூழ்நிலை எழுந்தபோதும் அதை அசாதாரணமாக கையாண்டு, நிலைமையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். 

மூத்த காங்கிரஸ் தலைவர்களை ஓரங்கட்டி விட்டதாக சிலர் வெளிப்படையாக புலம்பியபோதும், தனக்கு எதிராக அவர்கள் அணி திரளாமல் பார்த்துகொண்டார். தனக்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர் சீனிவாஸ் பிரசாத், முன்னாள் எம்பி ஏ.எச்.விஸ்வநாத் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளிய சித்தராமையா, தன்னை எதிர்த்து பகிரங்கமாக பேசிவந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜனார்த்தன பூஜாரி, சி.கே.ஜாபர்ஷெரீபை மெளனமாக்கிவிட்டார். 

தாழ்த்தப்பட்டோர் தலைவராகவும், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவராகவும் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவை திருப்திப்படுத்த அவரது மகன் பிரியாங்க் கார்கேவை அமைச்சராக்கிவிட்டார். 

இத்தனைக்கும் பிறகு, 2018-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து இரண்டாவது முறையாக முதல்வராகும் கனவில் இருக்கிறார் சித்தராமையா. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள காங்கிரஸ் மேலிடம், இந்தத் தேர்தலை சித்தராமையா தலைமையில் எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது. 

மூடநம்பிக்கையைத் தகர்த்தவர்
சாமராஜ்நகர் மாவட்டத்துக்குச் சென்றாலோ, பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்தில் குடியேறினாலோ முதல்வர் பதவியை இழந்து விடுவார்கள் என்ற மூடநம்பிக்கை கர்நாடக அரசியலில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதை பலரும் பின்பற்றி வந்தனர். இவற்றை தகர்த்தெறிந்த முதல்வர் சித்தராமையா, சாமராஜ் நகருக்கு 10 முறைக்கும் அதிகமாகச் சென்று திரும்பியதோடு, கடந்த 3 ஆண்டுகளாக காவிரி இல்லத்தில் வசித்துவருகிறார்.
நல்லாட்சிக்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியக் கூறாக விளங்குவதால், கடந்த நான்கரைஆண்டுகளாக நிலையான ஆட்சி மற்றும் சிறந்த ஆட்சியையும் வழங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தேவராஜ் அர்ஸை விஞ்சுவாரா?
தேவராஜ் வழித்தோன்றல் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் சித்தராமையா, அவரது வழியில் ஐந்தாண்டுகால முதல்வர் பதவியை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்று, தேவராஜ் அர்ஸின் சாதனையை முறியடித்து, 7 ஆண்டுகள் 234 நாள்களை கடந்தும் ஆட்சி நடத்துவாரா? என்ற கேள்விக்கு மக்களும், காலமும்தான் பதில் சொல்லவேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com