சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி என உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி என உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, வீரமரணமடைந்த வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வகையிலும் பாதிக்காது. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வென்று ஆட்சியைக் கைப்பற்றும். பிரதமர் மோடியின் செல்வாக்கு தாற்காலிகமானது. காலம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெற்று விளங்குகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் நல்லாட்சி வழங்கியுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் செயல்படுத்தியுள்ளது. ஆனால், பாஜகவினர் பொய்யை சொல்லிக்கொண்டு காலம் கடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடியும் பொய் சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி தவறிவிட்டார். இவை எல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே, கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது.
மாநில நலனுக்கு பாஜகவினர் செய்துள்ள நன்மை என்ன? மகதாயி ஆற்றுநீர் பிரச்னையைத் தீர்த்துள்ளனரா? மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக வறட்சி நிவாரண நிதி பெற்றுத் தந்தார்களா? மாநில மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்களா? இந்த நிலையில் பாஜகவை மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, மக்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றார் அவர்.
நிகழ்ச்சியின் போது, மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி, பாஜக எம்.எல்.சி. கணேஷ் கார்னிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com