இன்று உலக தாய்மொழி தினம்: கர்நாடகத் தமிழரின் தாய்மொழி உரிமை நிலைநாட்டப்படுமா?

தாய் தமிழகத்துக்கு வெளியே தொன்மையான, ஆழமான வரலாற்றுத் தடங்களைப் பதித்த தமிழர்களில் கர்நாடகத் தமிழர்களுக்கு
இன்று உலக தாய்மொழி தினம்: கர்நாடகத் தமிழரின் தாய்மொழி உரிமை நிலைநாட்டப்படுமா?

தாய் தமிழகத்துக்கு வெளியே தொன்மையான, ஆழமான வரலாற்றுத் தடங்களைப் பதித்த தமிழர்களில் கர்நாடகத் தமிழர்களுக்கு சிறப்பானதொரு இடமுண்டு. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்த பெங்களூரு, சாமராஜ்நகர், கோலார் தங்கவயல், பெல்லாரி, தாவணகெரே, மங்களூரு உள்ளிட்ட பல இடங்கள் தமிழகத்துடன் இணைக்கப்படாமல் கர்நாடகத்தில் அங்கமாக்கப்பட்டன.
 கர்நாடகத்தில் அங்கம் வகித்தாலும் மொழி, இலக்கியம், கல்வி, சமூகம், பொருளாதார உரிமைகள் தமிழர்களுக்கு பொய்க்காமல் இருந்துவந்தது. ஆனால், காலம் தேயத் தொடங்கியதும் கன்னடர்களின் அரசியல் நெருக்கடியால் தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக கரையத் தொடங்கின. இங்குள்ள தமிழர்கள் கர்நாடகத்தை தாய் மாநிலமாக்கிக் கொண்டு, 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், கர்நாடகத் தமிழர்களுக்கு தாய்ப் பாசம் மட்டும் கிடைக்கவேயில்லை.
 தமிழ்க் கல்வி: பெங்களூரு மாநகரில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பெங்களூரு, மங்களூரு, குடகு, பெல்லாரி, கோலார் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் பெங்களூரில் தமிழர்களின் மக்கள்தொகை 60 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்துவந்தது. மைசூரு உடையார்கள் ஆட்சிக் காலம் மட்டுமல்லாது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் தமிழர்கள் கணிசமாக வாழ்ந்து வந்ததால், பெங்களூரில் அதிக எண்ணிக்கையில் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டன.
 ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன என்பதன் மூலம் தமிழ்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணரலாம்.
 கோகாக் குழு அறிக்கை: மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, கர்நாடகத்தில் ஆரம்பத்தில் இருந்தே மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலத்துடன் சம்ஸ்கிருதம், இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டு, கன்னட மொழி முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது. இதேநிலை நீடித்தால், கன்னட மொழி அழிந்துவிடும் என்ற அபாயத்தை உணர்ந்த கர்நாடக அரசு, ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் கன்னட மொழியை அறிமுகம் செய்வது குறித்து ஆராய்வதற்காக 1980-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி பேராசிரியர் வி.கே.கோகக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
 கன்னடம் தவிர ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, தமிழ், உருது மொழியின் முக்கியத்துவம் ஆராய்ந்த வி.கே.கோகாக், ஆரம்பப் பள்ளி வகுப்பில் இருந்து முதல்மொழிப் பாடமாக கன்னடத்தை கட்டாயமாக்கப் பரிந்துரைத்தது. இந்த அறிக்கைக்கு மொழி சிறுபான்மையினரிடம் இருந்து எதிர்ப்பும், போராட்டமும் வெடித்தது. இதனிடையே, கோகாக் குழு அறிக்கையைச் செயல்படுத்தக் கோரி கன்னட அமைப்புகளால் தீவிர போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக, கன்னட மொழியை கட்டாயமாக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது.
 தமிழுக்கு எதிரான உணர்வு: இதனையடுத்து, கர்நாடக அரசு அமைத்திருந்த டாக்டர் சரோஜினி மகிஷி குழு அறிக்கையில் கர்நாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு பெரும் பங்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. கன்னடம் படித்திருந்தால் மட்டுமே பிறமொழியினருக்கு வேலைவாய்ப்பு என்ற நிபந்தனையையும் அக் குழு விதித்திருந்தது. கன்னடம் படித்தால் தான் வேலைவாய்ப்பு என்ற உத்தரவுகள் கர்நாடகத் தமிழர்களின் மனநிலையைப் புரட்டிப் போட்டுவிட்டது. 1970-களில் தொடங்கிய காவிரிப் பிரச்னை, 1991-இல் கர்நாடகத் தமிழர்கள் மீது வன்முறை வெறியாட்டமாக மாறியது. 1980 முதல் 1995-ஆம் ஆண்டு வரை தமிழர்களின் மொழி, கல்வி, அரசியல் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக, 1990-களுக்குப் பிறகு கர்நாடகத்தில் இயங்கிவந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் சுருங்கத் தொடங்கின, தமிழாசிரியர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கின.
 கர்நாடகத்தில் நிலையாக வாழ்ந்துவரும் தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்மொழியைக் காட்டிலும் வேலைவாய்ப்புக்காக கன்னடம், இந்தி, ஆங்கிலத்தை போதிக்கத் தொடங்கினர். தமிழ் மாணவர்கள் இல்லையென்று தமிழ்ப் பள்ளிகளை கர்நாடக அரசு படிப்படியாக மூடத் தொடங்கியது.
 தமிழின் எதிர்காலம்: கர்நாடகத்தில் வாழக்கூடிய 75 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களில், ஒரு சதவீதத்தை தவிர, இதர 99 சதவீதத்தினருக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. 50 சதவீதம் பேருக்கு தமிழில் பேசத் தெரியாது. இதே நிலை நீடித்தால், கர்நாடகத்தில் தமிழ் தெரியாத தமிழர்கள்தான் மிஞ்சுவார்கள் என்பதால், தனிப் பயிற்சியாக தமிழ் கற்றுக்கொடுக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம், தனியார் பள்ளிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், கோயில்களில் தமிழ் வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றன. இதுபோன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றாலும், இதன் வெற்றி தமிழர்களின் ஒத்துழைப்பில் அடங்கியிருக்கிறது.
 கர்நாடகத்தில் எஞ்சியிருக்கும் அரசு, தனியார் பள்ளிக்கூடங்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் கர்நாடகத் தமிழர்கள் அனைவரும் பொருள் கொடுத்தும், உடலுழைப்பைத் தந்தும் துணையாக இருக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகளுக்கு கர்நாடக அரசு மட்டுமல்லாது, தமிழக அரசும் நிதி உதவி அளிக்க வேண்டும். தமிழர்களின் அடையாளம் தமிழ்மொழி என்பதை மறவாமல், நம் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க உலக தாய்மொழி நாளில் உறுதியேற்க வேண்டும், உறுதிப்பட தமிழ்மொழியைக் காக்க வேண்டும் என்பதே இங்குள்ள மூத்தத் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com