பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை: குடியரசுத் தலைவர் இன்று தொடக்கி வைக்கிறார்

பெங்களூரு மெட்ரோ ரயிலின் முழுமையான சேவையை சனிக்கிழமை (ஜூன் 17) முதல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடக்கி வைக்கிறார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை: குடியரசுத் தலைவர் இன்று தொடக்கி வைக்கிறார்

பெங்களூரு மெட்ரோ ரயிலின் முழுமையான சேவையை சனிக்கிழமை (ஜூன் 17) முதல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடக்கி வைக்கிறார்.
 இந்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் கூட்டு ஒத்துழைப்புடன் சிறப்புநோக்கு திட்டத்தின்கீழ் பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் (பிஎம்ஆர்சிஎல்) உருவாக்கப்பட்டது.
 பெங்களூரில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கு "நம்ம மெட்ரோ' என்று கர்நாடக அரசு பெயர் சூட்டியுள்ளது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மட்டுமல்லாது, மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு "நம்ம மெட்ரோ' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
திட்டப்பணி
 பெங்களூரு மாநகரின் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் 42.3 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
 கிழக்கு-மேற்கு தடத்தில் பையப்பயனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி (மைசூரு சாலை) வரை 18.10 கி.மீ. தொலைவுக்கும், வடக்கு-மேற்கு தடத்தில் நாகசந்திரா முதல் யெலசேனஹள்ளி வரை 24.20 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது.
 கிழக்கு-மேற்கு வழித்தடம் ஊதா தடம், வடக்கு-மேற்கு வழித்தடம் பச்சை தடம் என்று அழைக்கப்படுகிறது. ரூ.14 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள நம்ம மெட்ரோ, இந்தியாவிலே 750 வோல்ட் டிசி மின்சாரத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் திட்டமாகும்.
 மெட்ரோ ரயில் பயணத்துக்காக 33.48 கி.மீ. தொலைவுக்கு உயர் மேம்பாலமும், 8.82 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 34 கி.மீ. ஆகும்.
ரயில் நிலையங்கள்
 மெட்ரோ ரயில் திட்டத்தில் ஊதா மற்றும் பச்சை வழித்தடத்தில் மொத்தம் 42 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உயர் மேம்பாலத்தில் 35, சுரங்கப் பாதையில் 7 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
 பச்சைவழித்தடத்தில் நாகசந்திரா, தாசரஹள்ளி, ஜாலஹள்ளி, பீன்யா தொழில்பேட்டை, பீன்யா, யஷ்வந்த்பூர் தொழில்பேட்டை, யஷ்வந்த்பூர், மைசூரு சாண்டல்சோப் தொழிற்சாலை, மகாலட்சுமி லேஅவுட், ராஜாஜி நகர், குவெம்பூசாலை, ஸ்ரீராமபுரா, மந்த்ரி ஸ்கொயர் சம்பிகேசாலை, கெம்பே கெüடா, சிக்பேட், கிருஷ்ணராஜேந்திரா மார்க்கெட், நேஷனல் கல்லூரி, லால்பாக், செüத் என்ட் சதுக்கம், ஜெயநகர், ஆர்.வி.கல்லூரி சாலை, பனசங்கரி, ஜெயபிரகாஷ் நகர், யெலசேனஹள்ளி ஆகிய 25 ரயில் நிலையங்கள், ஊதா வழித்தடத்தில் பையப்பனஹள்ளி, சுவாமி விவேகானந்தா சாலை, இந்திரா நகர், அல்சூர், டிரினிட்டி, மகாத்மா காந்தி சாலை, கப்பன்பூங்கா, டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் விதானசெüதா, எம்.விஸ்வேஷ்வரா சென்ட்ரல் கல்லூரி, கிராந்திவீரா சங்கொல்லி(சிட்டி ரயில்நிலையம்), மாகடிசாலை, ஹொசஹள்ளி, விஜயநகர், அத்திகுப்பே, தீபாஞ்சலி நகர், நாயண்டஹள்ளி(மைசூருசாலை)ஆகிய 17 ரயில்நிலையங்கள் அமைந்துள்ளன.
தொடக்க விழாக்கள்
 மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் முதல் தடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010 மார்ச் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் மெட்ரோ ரயிலின் முதல் சேவையைத் தொடக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை நிறைவுசெய்ய முடியாமல் மெட்ரோ ரயில் கழகம் திணறியது.
 ஒருவழியாக மெட்ரோ ரயிலின் முதல் சேவை பையப்பனஹள்ளி முதல் மகாத்மா காந்தி சாலை வரை 2011 அக்.20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கி வைத்தார்.
 அதன்பிறகு நாகசந்திரா முதல் மல்லேஸ்வரம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை 2014 மார்ச் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கப்பன்பூங்கா முதல் மாகடி சாலை வரையிலான சுரங்கப்பாதை உள்ளிட்ட நாயண்டஹள்ளி வரையிலான வழித்தடம் 2016 ஏப்.30-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
 தற்போது பச்சை வழித்தடத்தில் சம்பிகேஸ்கொயர் முதல் யெலசேனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில்சேவை ஜூன் 17-ஆம் தேதி தொடக்கி வைக்கப்படுகிறது. இதன்மூலம் நம்ம மெட்ரோவின் முதல்கட்ட திட்டப் பணியில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு வழித்தடம் முழுமையாக பயணிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதன்மூலம் மெட்ரோ ரயிலில் தினமும் 5 லட்சம் பேர் பயணிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பங்கேற்பு
 பெங்களூரு விதான செளதாவில் ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடக்கவிருக்கும் விழாவில் நம்ம மெட்ரோ ரயிலின் முழுமையான சேவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
 இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், டி.வி.சதானந்த கெüடா, பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
 ஜூன் 18-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயிலின் முழுமையான சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.
 மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மெட்ரோ ரயில் பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், பெங்களூரின் அடையாளமாகவும் மெட்ரோ ரயில் சேவை மாறியுள்ளது.
மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு
 மெட்ரோ ரயில் கட்டணம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) முதல் 10 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது.
 மெட்ரோ ரயில் சேவைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அந்த நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் திட்டமிட்டுள்ளது. புதிய கட்டண விகிதம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரவிருக்கிறது.இதுகுறித்து மெட்ரோ ரயில் கழகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியது:
 பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையால் கழகத்திற்கு தினமும் ரூ.35 லட்சம் வருவாய்க் கிடைத்து வருகிறது. எனினும், ஆண்டுக்கு ரூ.276 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் சேவை கட்டணங்கள் 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நஷ்டத்தின் அளவு ரூ.150 கோடியாக குறையும். ஊதா வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடத்தின் ஒருபகுதியில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் 2011-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
 கடந்த 6 ஆண்டுகளில் இயக்குதல் செலவு பலமடங்காக அதிகரித்துள்ளது. எனவே, மெட்ரோ ரயில் சேவை கட்டணத்தை தவிர்க்க முடியாமல் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
 கட்டண உயர்வுக்கு பிறகு நாகசந்திரா முதல் யெலசேனஹள்ளி வரையிலான பயணத்துக்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படும். குறுகிய தொலைவு பயணத்திற்கான கட்டணம் ரூ.2-இல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது.
 ஜூன் 17-ஆம் தேதி முதல் பச்சை மற்றும் ஊதா வழித்தடம் முழுமையாக செயல்பட தொடங்கும். அப்போது, மெட்ரோ ரயிலில் தினமும் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 அதன்பிறகு மெட்ரோ ரயில் கழகத்தின் தினசரி வருவாய் ரூ.1 கோடியாக உயரும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி ஆதாரங்களை கழகமே ஏற்கவிருக்கிறது. நில கையகப்படுத்தலுக்கும் மத்திய அரசு நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது. எனவே, கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகும் என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கண்டனம்
 மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு சோசியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா-கம்யூனிஸ்ட் (எஸ்யூசிஐ-சி) பெங்களூரு மாவட்டக் குழுவின் செயலாளர் வி.ஞானமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
 தனது அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் சேவைகளின் கட்டணத்தை 10 சதம் அளவுக்கு உயர்த்த மாநில அரசு எடுத்துள்ள முடிவை கண்டிக்கிறோம்.
 பெங்களூரு மெட்ரோ ரயிலின் கட்டணம் நாட்டிலேயே அதிகமானதாகும். கட்டண உயர்வு காரணமாக தொலைவிட பயணம் ரூ.60, குறுகிய தொலைவு பயணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இந்த கட்டண உயர்வு ஜூன் 18-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயிலில் பயணிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 5 லட்சம் பயணிகளை தினமும் பாதிக்கும். எனவே, இந்த முடிவை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
 மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகைக் கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்க வேண்டும். மேலும் சலுகைக் கட்டண மாத அட்டையையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிவரை நீட்டிப்பு
 நான்கு முனையங்களில் இருந்தும் பெங்களூரு மெட்ரோ ரயிலின் கடைசி சேவை இரவு 10 மணிக்குப் பதிலாக இரவு 11 மணி வரை புறப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து பெங்களூ மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 பெங்களூரு மெட்ரோ ரயிலின் முதல்கட்டப் பணியின் முழுமையான சேவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜூன் 17-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதைத் தொடர்ந்து, பச்சை வழித்தடத்தில் நாகசந்திரா முதல் யெலசேனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஜூன் 18-ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தொடங்கப்படும்.
 முழுமையான ரயில்சேவை ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடங்கும். அன்று முதல் தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். பையப்பனஹள்ளி, நாயண்டஹள்ளி(மைசூருசாலை), நாகசந்திரா, யெலசேனஹள்ளி முனையங்களில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுவதால் இந்த ரயிலின் வேகம் மிதமாக இருக்கும். ஜூன் 19-ஆம் தேதி முதல் தினமும் காலை 5.30 மணி முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கும். ஊதா மற்றும் பச்சை வழித்தடத்தில் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மற்றும் நெரிசல் குறைந்த நேரத்தில் ரயில்கள் முறையே 4.20 நிமிடங்கள் மற்றும் 6.20 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்படும்.
 முனையங்களில் இருந்து கடைசி ரயில் புறப்படும் நேரம் வருமாறு: பையப்பனஹள்ளியில் இருந்து இரவு 11 மணி, நாயண்டஹள்ளியில் இருந்து இரவு 11.05 மணி, நாகசந்திராவில் இருந்து இரவு 10.50 மணி, யெலசேனஹள்ளியில் இருந்து இரவு 11 மணி. கெம்பேகெüடா ரயில்நிலையத்தில்(மெஜஸ்டிக்)இருந்து ஊதா மற்றும் பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் ரயில் கடைசியாக இரவு 11.25 மணிக்கு வந்து செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com