போராட்டத்தை கைவிட வேண்டும்: அங்கன்வாடி ஊழியர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்

வரும் ஏப்.19-ஆம் தேதி கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளதால்,

வரும் ஏப்.19-ஆம் தேதி கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளதால், அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
 புதன்கிழமை காலை பேரவைக் கூட்டம் தொடங்கியதும், அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி எழுப்பினார்.
 இதனிடையே, மஜத உறுப்பினர்கள் கோனரெட்டி, ந.ர.மகேஷ், கிருஷ்ணரெட்டி உள்ளிட்ட அனைவரும் அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட் இருக்கை முன் கூடி தர்னாவில் ஈடுபட்டனர்.
 இதற்குப் பதிலளித்துப் பேசிய சித்தராமையா, "அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்னை மட்டுமல்லாது, தினக்கூலி தொழிலாளர் பிரச்னை, மதிய உணவு தொழிலாளர் கோரிக்கைகள், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மாநில அரசின் கவனத்தில் உள்ளன. அதற்குள், தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர்.
 அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத் தலைவர் வரலட்சுமி, தொழிற்சங்கத் தலைவர் மாருதிமான்படே, எழுத்தாளர் மரளுசித்தப்பா, நிடுமாமுடி சுவாமிகள், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் உமாஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் அங்கன்வாடி ஊழியர் பிரச்னை விவாதிக்கப்பட்டது.
 சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிந்த பிறகு கோரிக்கைகள் குறித்து ஏப்.19-ஆம் தேதி அங்கன்வாடி ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 இதற்கு அந்தச் சங்கத்தினரும் ஒப்புதல் தெரிவித்துவிட்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களின் ஊதியத்தை ஆண்டுக்கு முறையே ரூ.500, ரூ.250 என உயர்த்தி வருகிறது.
 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை ரூ.1000, உதவியாளர்களின் ஊதியத்தை ரூ.500 ஆக உயர்த்தியிருக்கிறோம்.
 அதன்படி ஏப்.1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7 ஆயிரம், உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.5200 வழங்கப்படும். ஆனால், ஊதியத்தில் கூடுதலாக ரூ.4 ஆயிரம் உயர்வு கேட்டால் அதை எப்படி செயல்படுத்த இயலும்? அங்கன்வாடி ஊழியர்களின் நலனில் அரசுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. ஏப்.19-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அரசு ஒப்புக் கொண்டுவிட்டதால், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என்றார்.
 போராட்டக்காரர்கள் மயக்கம்
 பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் மூன்றாவது நாளாக புதன்கிழமை 16 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 15 பேர் மயங்கினர். உடனடியாக அவர்களை மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி.அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விதானசெளதாவை முற்றுகையிடவும் அங்கன்வாடி ஊழியர்கள் முற்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com