மாமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்: எம்.எல்.ஏ. முனிரத்னா மன்னிப்பு கோர மறுத்தால் ஆதரவு வாபஸ்: மஜத

பெங்களூரு லக்கெரே வார்டு மஜத மாமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மன்னிப்பு கோர வேண்டும். மறுக்கும் பட்சத்தில், பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ்

பெங்களூரு லக்கெரே வார்டு மஜத மாமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மன்னிப்பு கோர வேண்டும். மறுக்கும் பட்சத்தில், பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என மாநகராட்சி மஜத தலைவர் ரமீலா உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை லக்கெரே வார்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அந்த வார்டின் மஜத மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா நாராயணசாமி, அத்தொகுதி எம்.எல்.ஏ. முனிரத்னாவின் ஆதாரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சனிக்கிழமை மஜத கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ரமீலா உமாசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: மஜத மாமன்ற பெண் உறுப்பினர் மீது எம்.எல்.ஏ. முனிரத்னாவின் ஆதரவாளர்கள் நடந்து கொண்ட முறை கண்டிக்கத்தக்கது. தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் சித்தராமையாவிடம் மஞ்சுளா முறையிட்டுள்ளார். அதன் பிறகும் முனிரத்னா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்கப்பட்ட மஞ்சுளா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் சித்தராமையா பார்த்து நலம் விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ஒரு பெண் என்ற போதிலும், அவரது கட்சியினர் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது காட்டுமிராண்டித்தனம். இதுகுறித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதப்படும்.
பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவிடம் அதிகாரம் செல்லக்கூடாது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தோம். எங்கள் ஆதரவில் அதிகாரத்தில் உள்ளவர்கள், எங்கள் உறுப்பினர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. முனிரத்னா, மஞ்சுளா நாராயணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசிப்போம். இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
பேட்டியின் போது துணை மேயர் ஆனந்த், சட்டமேலவை உறுப்பினர் டி.ஏ.சரவணா, பெங்களூரு மாநகர மஜத தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com