"மாநில மொழிகளை பரவலாக்க வேண்டும்'

தகவல் தொழில்நுட்பத் துறையில் மாநில மொழிகளைப் பரவலாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என ரேவ்ரீ மொழி

தகவல் தொழில்நுட்பத் துறையில் மாநில மொழிகளைப் பரவலாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என ரேவ்ரீ மொழி தொழில்நுட்பத்தின் இணை நிறுவனர் விவேகானந்தபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. இதேபோல கணினி, செல்லிடப்பேசி செயலிகளில் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால், குறைந்த அளவில் கல்வித் தகுதி உள்ள பாமரர்கள், செல்லிடப்பேசி செயலி, கணினியைப் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளனர்.
குறிப்பாக மத்திய அரசின் எண்ம திட்டம் கல்வியில் பின்தங்கியுள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 80 சதம் பேருக்கு ஆங்கில அறிவு குறைவாகவும், தங்கள் தாய்மொழி அறிவு அதிக அளவில் உள்ளது.
எனவே எண்ம, தகவல் தொழில்நுட்பத்தில் மாநில மொழிகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு தங்கள் தாய்மொழியில் வேளாண் தகவல்களைத் தருவதன் மூலம் அவர்களின் விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும்.
இதேபோல சுகாதாரத் துறையிலும் மாநில மொழிகளில் தகவல்களைத் தருவதன் மூலம் அதன் பயன் மக்களை அதிக அளவில் பெறமுடியும். அரசு சேவைகளில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும்.
மத்திய, மாநில அரசுகளின் இணைதளம், செல்லிடப்பேசி சேவைகள் மாநில மொழிகளில் இருப்பது அவசியம். ஊரகங்களில் எண்ம பயன்பாடு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்.
மாநில மொழிகளைப் பரவலாக்குவதன் மூலமே மத்திய, மாநில அரசுகள் வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடத்தில் கொண்டு செல்ல முடியும். அதற்கான பாலமாக திகழும் வகையில் இ-நாம் சேவையைத் தொடங்கியுள்ளோம்.
இதன்மூலம் தேசிய அளவில் 22 மொழிகளில் விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தங்களுக்கு புரிந்த மொழியில் பெற முடியும் என்றார்.
பேட்டியின் போது, இ-நாம் சேவையின் வர்த்தக பிரிவு தலைவர் ரிஷி கூடலே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com