தீபாவளி திருநாள்: கர்நாடகத்தில் கோலாகலம்...!

14 ஆண்டு வன வாசத்தை முடித்துகொண்டு ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்புவதை கொண்டாடுவதற்காக தெருவெங்கும் தீபம் ஏற்றி கொண்டாடியதையே தீபாவளி
தீபாவளி திருநாள்: கர்நாடகத்தில் கோலாகலம்...!

கர்நாடகத்தில் தீபாவளி புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நாடெங்கும் அனைவராலும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளியாகும்.  இந்துக்கள்,  சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோரும்,   உலகெங்கும் வாழும் இந்தியர்களும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

இருந்தாலும், கொண்டாட்டத்துக்கான காரணங்களும் முறைகளும் மாநிலத்துக்கு  மாநிலம் மாறுகின்றன.  

தீப ஒளி,  நேர்மையின் வெற்றிச் சின்னமாகவும், ஆன்ம இருள் அகலுவதை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது.

புராணம்கூறுவது என்ன?
14 ஆண்டு வன வாசத்தை முடித்துகொண்டு ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்புவதை கொண்டாடுவதற்காக தெருவெங்கும் தீபம் ஏற்றி கொண்டாடியதையே தீபாவளி என்றும் கொடிய அரக்கன் நரகாசூரனை வதம் செய்து கொன்று,  அதிதி தேவதையின் காதணியையும்,  சிறைபிடிக்கப்பட்டிருந்த திருமணமாகாத இளநங்கைகளையும் அவனிடமிருந்து மீட்டு திரும்பியதை வெற்றிதிருவிழாவாக கருதி தீபாவளியே என்றும் கூறி கொண்டாடப்படுகிறது.

கன்னடர் தீபாவளி: ஆனால், கர்நாடகத்தில் தீபாவளியை மக்கள் பலிபாட்யமியாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

'நீரு தும்புவா ஹப்பா' எனப்படும் நீர் நிரப்பும் விழா, 'நரகாசதுர்தஷி' எனப்படும் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்று வென்ற விழா,  'லட்சுமி பூஜை'எனப்படும் செல்வம் வேண்டும் விழா,  'பலிபாட்யமி'எனப்படும் அகம்பாவம் கொண்ட அரசன் பலி சக்ரவர்த்தியை விஷ்ணு பகவான் வீழ்த்தியதை கொண்டாடும் திருநாள் என 4 விதமாக, 4 நாள்களுக்கு  கர்நாடகத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

போளி, அதிரசம், கோட்பேலே போன்ற பலகாரங்கள், வண்ணக்கோலங்கள், அகல்விளக்குகள், பட்டாசுகள் போன்றவையும் தீபாவளி கொண்டாட்டத்தில் உள்ளது.

அஸ்வினி மாதத்தின் கடைசி மூன்றாவது நாளில் நீர்நிரப்பும் விழாவுடன் கன்னடர்கள் தீபாவளியைத் தொடங்குவார்கள். சுண்ணாம்பு, பூவிதழ்கள், கோலமாவு கொண்டு குளியலறைகள் சுத்தம் செய்யப்படும். குளியலறையில் வைக்கப்பட்டுள்ள அண்டா, குண்டாக்களில் தண்ணீர் நிரப்படும்.  இதன் மீது விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்படும். அடுத்த 3 நாள்களுக்கான பண்டிகையின் தொடக்கவிழாவாக இது அமையும்.

இரண்டாவது நாள், நரகாசூரனை கிருஷ்ணபகவான் வதம் செய்து கொன்றது நரகாசதுர்தஷியாக கொண்டாடப்படுகிறது. சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து, வீடு மற்றும் முற்றத்தை சுத்தப்படுத்தி, வாசலில் வண்ணக்கோலமிடுவார்கள். தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். கங்கை நதியில் மூழ்கியதற்கு நிகரானதாக எண்ணெய் குளியல் கருதப்படுகிறது. எண்ணெய் குளியலுக்கு முன்பு வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் பாய் மீது வரிசையாக அமர்ந்திருப்பார்கள்.

குடும்பத்தலைவர், குடும்ப உறுப்பினர்களுக்கு எண்ணெய் சடங்குகளை செய்து, எண்ணெய் பூசிவிடுவார். உறுப்பினர்களின் நெற்றியில் திலகமிட்டு, தங்கவிரலால் எண்ணெய் எடுத்து தலை, கை,கால்களில் தடவிவிடுவார். எண்ணெய் குளியலுக்கு முன்பாக அனைவருக்கும் ஆரத்தி எடுக்கப்படும். மூத்தவர்களை வணங்கிவிட்டு எண்ணெய் குளியல் எடுத்துகொள்வார்கள். அதன்பிறகு, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிப்பார்கள்.  பாயாசம்,  எலுமிச்சைசாதம் (சித்ரன்னா), பாசிப்பயறுடன் நறுக்கிய பச்சைக்காய்கறிகள் (கோசம்பரி),  கூட்டு, பொரியல் (பல்யா), போளி (ஹோலிகே), வடை(ஆமவடே)ஆகியவை படைக்கப்பட்டு, பரிமாறப்படும்.

மூன்றாம் நாள், அமாவாசை தினம். செல்வச்செழிப்பை வேண்டி லட்சுமிபூஜை செய்து கொண்டாடப்படுகிறது. புதியதொழில் மற்றும் புதிய கணக்கு தொடங்குவதற்கு, புதியவாகனம் வாங்குவதற்கு, பொதுவில் புதியன செய்வதற்கு இந்தநாள் புனிதநாளாக கருதப்படுகிறது.

நான்காம் நாள், கார்த்திகை மாதத்தின் முதல் நாள். இந்நாள் பலிபாட்யமியாக கொண்டாடப்படுகிறது. ஆணவம் தலைக்கேறி, கர்வம் கொழுத்திருந்த பலி சக்ரவர்த்தியை வாமன அவதாரம்  எடுத்து விஷ்ணுபகவான் அதலபாதாளத்தில் தள்ளியதை கொண்டாடுவதே பலிபாட்யமி.  இதற்காக சாணியை பிடித்துவைத்து, அதன்மீது செண்டுமல்லி செருகி பூஜை அறையில் வைத்து வணங்குவார்கள்.

இதற்கு முன்பு,'பலிந்திரா பூஜை'செய்ய வேண்டும். தட்டில் அரிசியை கொட்டி,  அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, அதன் மீது கலசம் வைக்க வேண்டும். கலசத்தின் முன்பு கிருஷ்ணபகவானின் விக்கிரகம் வைத்து பூஜிக்க வேண்டும். தீபாவளியின் இறுதிநாளான பலிபாட்யமி அன்று வானம் வண்ணவண்ண வெடிகளின் வசப்படும். வானத்தில் மின்னும் வானவேடிக்கைகள் சிறுவர் உள்ளிட்ட அனைவரையும் கவரும். இல்லத்தின் மூலைமுடுக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் அகல்விளக்குகளில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ந்து, பரவி படரும்.

கார்த்திகை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் தீபாவளி பண்டிகை முடிவுக்கு வரும். இந்த நன்னாளில், துளசிக்கு திருமணம் செய்து வைத்து கொண்டாடப்படும்.

துளசி விருட்சத்துக்கு அருகில் கிருஷ்ணரின் சிலை வைத்து வணங்கப்படும். பூஜையில் நெல்லிச்செடி வைத்திருப்பது அவசியம். ஐந்து நெல்லிகனிகளுடன் கிருஷ்ணருக்கு ஆரத்தி எடுக்கப்படும். இதை காண வருகைதரும் விருந்தினர், உறவினருக்கு சுண்டல்(உசிலி) அல்லது பாசிப்பயிறு உடன் நறுக்கிய காய்கறிகள்(கோசம்பரி)பரிமாறப்படும்.

அன்பும், பண்பும் பறைச்சாற்றும் மகிழ்ச்சிப்பூக்கும் இன்ப வானமன்றோ தீபாவளி என்ற மக்கள் குதூகலித்து தீபாவளி திருநாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com