ஊழல் குற்றச்சாட்டு: பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: காங்கிரஸ் பொதுச் செயலர் கே.வேணுகோபால்

காங்கிரஸ் அரசு மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் பாஜகவுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என

காங்கிரஸ் அரசு மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் பாஜகவுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்துள்ளது என பாஜக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜகவுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்று அக் கட்சியின் மூத்த தலைவர் முரளிதர்ராவ் எனக்கு சவால் விட்டிருந்தார். இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். விவாதிப்பதற்கான மேடையை பாஜக தயார்செய்துவிட்டு என்னை அழைக்கட்டும், நான் வருகிறேன்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. அதுபற்றி பேச பாஜகவுக்கு கிஞ்சிற்றும் அருகதையில்லை. சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதே பாஜக தான்.
மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் குறித்து பேச பாஜகவினருக்குத் தகுதியில்லை. கெளரி லங்கேஷின் படுகொலை குறித்து சிறப்பு புலனாய்வுப் படை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக மாநில அரசை விமர்சிப்பது சரியல்ல.
முதல்வர் சித்தராமையாவுக்கும், கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வருக்கும் இடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார் அவர்.
முன்னதாக, பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் பிரசார அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கே.சி.வேணுகோபால் பேசியது: அடுத்தாண்டு தொடக்கத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெல்ல வேண்டும். அதற்கேற்ப, கர்நாடகத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று முதல்வர் சித்தராமையா தலைமையிலான சாதனைகளைத் தெரிவிக்க வேண்டும். மேலும், சமூக வலைதளங்களிலும் சித்தராமையா அரசின் சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும்.
அதேபோல், பாஜக மற்றும் மஜத தலைவர்களின் கருத்துகள், குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க தவறக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழலை மக்களை மனதில் கட்டமைக்க வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை, பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மோசமான விளைவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டின் மொத்த உற்பத்திப் பொருள் விகிதம் (ஜிடிபி) வீழ்ச்சி அடைந்திருப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார் அவர்.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து வேறுபாடு இல்லை
காங்கிரஸ் மாநிலத் தலைவர்ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் சித்தராமையாவுக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை. வேறு எந்த விவகாரம் தொடர்பாக அதிருப்தியும் இல்லை. கடந்த வாரம் கூட முதல்வர் சித்தராமையா வீட்டுக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாநில அரசியல் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு வந்தேன்.
பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கடைசி நிமிடத்தில் எனக்கு அழைப்பு வந்தது. நான் ஏற்கெனவே வேறொரு நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டிருந்ததால், பெலகாவிக்குச் செல்ல இயலவில்லை. அரசு முறை பயணமாக தில்லி செல்லும் முதல்வர் சித்தராமையா, கட்சி மேலிடத் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். நானும் தனியாகச் சென்று கட்சி மேலிடத் தலைவர்களை சந்தித்திருக்கிறேன். எனவே, முதல்வர் சித்தராமையா மேலிடத் தலைவர்களை தனியாகச் சந்திப்பது புதிதொன்றுமில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com