தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

கிருஷ்ணராஜ சாகர் அணையில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததால், தமிழகத்துக்கு காவிரி நீரை தர இயலாத நிலையில் உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததால், தமிழகத்துக்கு காவிரி நீரை தர இயலாத நிலையில் உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
 இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் குறித்து வழக்குரைஞர்களிடம் ஆலோசித்து பதிலளிப்பேன். இந்த விவகாரத்தில் கர்நாடக தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைப்போம். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது. பேரிடர் கால நீர்ப் பகிர்வுப் படியும் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம்.
 விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்தால், அது பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கித் தலைவர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ள கருத்துகளை ஏற்க முடியாது. விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்தால், அது பொருளாதாரத்தின் மீது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றால், அதுபோன்ற மோசமான விளைவுகள் பெரிய தொழிலதிபர்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்தால் ஏற்படாதா? தொழிலதிபர்களின் வங்கிக் கடனை மட்டும் தள்ளுபடி செய்யலாம்; விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடிசெய்யக் கூடாதா?
 விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்திருக்கிறேன்.
 பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்கு அண்மைக் காலமாக தாழ்த்தப்பட்டோர் மீது திடீர் பரிவு ஏற்பட்டுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த போது தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் உணவு உண்ணும் எண்ணம் ஏற்படவில்லையா? இப்போது தேர்தல் நெருங்குவதால் தாழ்த்தப்பட்டோர் மீது எடியூரப்பா அன்பு காட்டுகிறார். எடியூரப்பாவின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com