பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவர கூடுதல் சலுகைகள்?

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (பிப்.16) தேதி முதல்வர் சித்தராமையா 2018-19-ஆம் நிதி ஆண்டுகான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (பிப்.16) தேதி முதல்வர் சித்தராமையா 2018-19-ஆம் நிதி ஆண்டுகான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியிடும் இந்த பட்ஜெட்டில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி பிப்.28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்ய உள்ளார்.
 நிதித் துறையை கூடுதலாக கவனித்துவரும் முதல்வர் சித்தராமையா, கர்நாடக சட்டப்பேரவையில் பல்வேறு காலக்கட்டங்களில் இதுவரை 12 முறை பட்ஜெட்களை தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில், முதல்வர் சித்தராமையா 13-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 நிதித்துறை நிர்வாகத்தில் ஆழ்ந்த அறிவு, அனுபவம் படைத்துள்ள முதல்வர்சித்தராமையா, தனது நிதிநிலை அறிக்கையில் அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு விவசாயம், மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 அண்மையில் நடந்து முடிந்த குஜராத், ஹிமாசல பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதனால், காங்கிரஸ், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
 கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்து மே மாதத்துடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு விவசாயம், தொழிலாளர், மகளிர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பல புதியதொழில்திட்டங்களையும் அறிவிக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
 தொழில் மற்றும் வர்த்தகத் துறையினரால் நீண்டகாலமாக முன்வைக்கப்படும் வர்த்தக உரிமம் முறையை ஒழிக்கும் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புள்ளது. வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலையை நிர்ணயிக்கும் முயற்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரப்படும் என்று நம்பப்படுகிறது.
 பண்ணைத்தொழில், ஆடுமேய்த்தல், உரம் தயாரித்தல் போன்ற வேளாண்சார் தொழில்களில் ஈடுபடவிருக்கும் பெண்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தை போல வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளுக்கு ஆண்டுக்கொருமுறை இலவச வேட்டி,சேலைவழங்கும் திட்டம் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
 தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கலப்புத் திருமணம் செய்துகொண்டால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முதல்முறையாக இந்த பட்ஜெட்டின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.
 இந்த கூட்டத்தொடரில் காவிரி, மகதாயி ஆற்றுநீர் பங்கீடு பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, ஹிந்து தொண்டர்கள் கொல்லப்படுவது, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிளான பாஜக, மஜத முடிவு செய்துள்ளன. அதற்கு உரிய பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் தயாராக உள்ளது.
 இம்மாத தொடக்கத்தில் ஆளுநர் வஜுபாய் வாலாவின் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர் பிப்.5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதிவரை 5 நாள்கள் நடைபெற்றது. இந்த நிலையில் 16-ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 "சித்தராமையாவின் வீண் முயற்சி'
 பெங்களூரு, பிப்.15: கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் முதல்வர் சித்தராமையா வீண் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
 இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வெகுவிரைவில் கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட் முழுமையானது அல்ல. இது வெறும் காகிதத்தில் மட்டும்தான் இருக்கும்.
 மக்கள் வாக்குகளை பெற்று அமையவிருக்கும் புதிய அரசால் தான் முழுமையான பட்ஜெட்டைதாக்கல் செய்ய இயலும். சித்தராமையாவின் ஊழல் அரசு மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளதால், மக்களை வஞ்சிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்து வீண்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
 வெகுவிரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வரவிருக்கிறது என்பதால் பட்ஜெட்டை அமல்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40-50 சதவீதத்தைகூட சித்தராமையாவால் செலவிட இயலவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 சில வாரங்களுக்கு முன்பு சாதனை மாநாடுகள் என்ற பெயரில் மக்கள் வரிப் பணத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் சென்ற சித்தராமையா, பட்ஜெட்டில் ஒதுக்கப்படாத கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மக்களை மீண்டும் வஞ்சிப்பதற்காக தற்போது அதிகார துஷ்பிரயோகம் செய்யமாட்டார் என்று கூறுவதற்கில்லை. ஊழலில் திளைத்துள்ள முதல்வர் சித்தராமையாவின் அரசுக்கு எதிராக மக்கள் ஆவேசமடைந்துள்ளனர். எனவே, எழுத்து வடிவிலான சித்தராமையாவின் பட்ஜெட்டுக்கு மதிப்பில்லை என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com