இலக்குகளை அடைய போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள துணிய வேண்டும்: விஞ்ஞானி டில்லிபாபு

இலக்குகளை அடைவதற்கு போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ள இளைஞர்கள் துணிய வேண்டும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி டில்லிபாபு கூறினார்.

இலக்குகளை அடைவதற்கு போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ள இளைஞர்கள் துணிய வேண்டும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி டில்லிபாபு கூறினார்.
புனித வளனார் கல்லூரியின் தமிழ் மாணவர் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், அவர் பேசியது: -
தமிழர் கலைகளாம் கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புறக்கலைவடிவங்களை கண்முன்னே கொண்டு வந்த மாணவர்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. இவர்கள் அறிவியல் பட்டப் படிப்பை படித்து வந்தாலும், மொழி, கலை, பண்பாட்டின் உறவை பாதுகாத்துவைத்திருக்கிறார்கள்.
குடும்பம், நாட்டுக்காக ஏராளமான கனவுகளோடு கல்லூரியில் படித்துவரும் இளைஞர்கள், அதை அடைவதற்கான அறிவாற்றலை பெற தவற கூடாது. பறவைகளை பார்த்து வானத்தில் பறக்க துணிந்த மனிதன், அந்த கனவை நனவாக்குவதற்கு ஏராளமான தடைகள், சங்கடங்கள், இடையூறுகள், சவால்கள், சிக்கல்கள், போராட்டங்களை கடக்க வேண்டியிருந்தது. வானத்தில் பறக்கும் ராக்கெட், விமானம் எதுவாக இருந்தாலும் அவற்றை கட்டமைக்கவிஞ்ஞானிகள் பலமணி நேர உழைப்பை செலவிடவேண்டியுள்ளது.
இந்தப் பணியில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுபோலதான் நமது வாழ்க்கையும். நமது வாழ்க்கையில் நாம் வகுத்துகொண்ட இலக்குகள், கனவுகள், இலட்சியங்களை அடைவதற்கு கடினமாக உழைப்பது ஒருபுறம் என்றால், எதிர்படும் சிக்கல்களை போராட்டங்களை துணிந்து எதிர்கொள்ளவேண்டும். அப்போதுதான் வானம் வசப்படும்.
அண்மையில் ஒரு காணொளிக்காட்சியை பார்த்தேன். அதில் முயல் ஒன்றைவேட்டை நாய் விரட்டி சென்று தனது முயற்சியில் தோற்றுபோனது. வேட்டை நாய் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் முயலை பிடித்திருக்கலாம் என்று சிலர் கூறினார். வேட்டைநாய் வயிற்றுப்பிழைப்புக்காக ஓடியது. ஆனால் முயல் தனது வாழ்க்கைக்காக ஓடியது.
முயற்சிகள் வயிற்றுப்பிழைப்புக்காக இல்லாமல், வாழ்க்கைக்காக இருந்தால் நாமும் முயலை போல வெற்றிபெறலாம்.
உலகின் ஆகச்சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தனது ஒப்பியல் கோட்பாடு குறித்து ஊர் ஊராக சென்று விஞ்ஞானிகளுக்கு விவரித்து உரையாற்றிக்கொண்டிருந்தார். இந்த் உரைகளைகவனித்து வந்த ஐன்ஸ்டீனின் கார் ஓட்டுநர்,"நீங்கள் பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறீர்கள். அவை எனக்கு முழுமையாக அறிந்துவிட்டேன். மாற்றத்துக்காக நான் பேசுகிறேன்" என்றிருக்கிறார்.
இதற்கு ஐன்ஸ்டீனும் ஒப்புக்கொண்டு, ஒரு கூட்டத்தில் தனது ஓட்டுநரை தன் பெயரில் பேசவிட்டிருக்கிறார். ஐன்ஸ்டீனை போல பேசிமுடித்த ஓட்டுநரிடம், பார்வையாளர் ஒருவர் கடினமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். நிலைமை மோசமாக போவதை உணர்ந்த ஐன்ஸ்டீன், தனது நற்பெயருக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற ஆதங்கத்தில் செய்வதறியாது திகைத்திருக்கிறார். அப்போது, தனக்கு பதில் தெரியவில்லை என்பதை உணர்ந்துகொண்ட ஓட்டுநர், அதை சமாளிக்கும் விதமாக,"நீங்கள் கேட்டதுமிகவும் எளிமையான கேள்வி. இதற்கு நான் பதில் சொல்வதை காட்டிலும், எனது ஓட்டுநர் பதில் சொல்வார்" என்று ஐன்ஸ்டீனை காட்டி மேடைக்கு அழைத்தாராம். அதுபோல, வாழ்க்கையில் எதிர்படும் எதிர்பாரா சவால்களை எதிர்கொள்ள வேண்டும். போராட்டம் இல்லாமல் யாருடைய ஆட்டமும் முடியபோவதில்லை என்பதை இளைஞர்கள் உணரவேண்டும். இன்றைய இளைஞர்களை திசைமாற்றிவருவதுசெல்லிடப்பேசிகள்தான். எனவே, செல்லிடப்பேசிகளிடம் இருந்து கொஞ்சம் செல்லாமல் இருந்தால், தொல்லைகள் இல்லாமல் இருக்கும் என்றார் அவர்.
விழாவில் பெங்களூரு பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் யு.பசவராஜ், கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி சி.மோகன் தாஸ், தமிழ்த்துறை தலைவர் ஆரோக்கியமேரி, தமிழ் விரிவுரையாளர் எமிலியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, கல்லூரி மாணவர்களின் கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலைகளின் நடனம் இடம்பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com