நீட் தேர்வின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையா?

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறும் சூழல் நிலவுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறும் சூழல் நிலவுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. இதனால் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு இழைத்துள்ளது. மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில்தான் நடைபெறும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. 2016 -ஆம் ஆண்டு முடிவடையும் வரை உறங்கிக் கொண்டிருந்த அரசு, 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் தான் விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவை இயற்றி அனுப்பியது. அதன்பின்பு அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரம் தீவிரமடைந்த பிறகு கடந்த மாதத்திலிருந்து தான் பெயரளவில் முயற்சி செய்தனர். அதேநேரத்தில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப்படுவது உறுதி என்று கூறி மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி, அதை நிறைவேற்றாததன் மூலம் அரசு மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டது.
ஜி.கே.வாசன்: ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் நீட் தேர்வு வேண்டாம் என குரல் கொடுக்கும்போது அதனை மத்திய அரசு மிக முக்கியப் பிரச்னையாக கவனத்தில் கொள்ளவில்லை. இனியும், மத்திய அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடிக்காமல் தமிழக மாணவர்களின் நலன் கருதி, குடியரசுத் தலைவரிடம் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தர வேண்டும். தமிழக மாணவர்கள் இந்த வருடம் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு முறை தடையாக இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
கி.வீரமணி: பிரதமர் தொடங்கி, மத்திய சுகாதார அமைச்சர், மனிதவளத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் என சந்திப்பு, முறையீடுகள், மீண்டும் ஓர் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் என்றெல்லாம் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் தில்லிக்குப் பலமுறை படையெடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. நீட் தேர்வுக்கு மக்கள் மன்றம்தான் இறுதி நம்பிக்கையாகும். மக்களைத் திரட்டுவோம்; நீதி பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com