ஈழத்தமிழர் பிரச்னையையும் இளைஞர்களிடம் கொண்டு செல்வோம்: அன்புமணி ராமதாஸ்

ஈழத்தமிழர் பிரச்னையையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
'ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை -அடுத்தது என்ன?' என்ற கையேட்டை வெளியிடும் (இடமிருந்து) பசுமைத் தாயகம் செயலர் அருள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
'ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை -அடுத்தது என்ன?' என்ற கையேட்டை வெளியிடும் (இடமிருந்து) பசுமைத் தாயகம் செயலர் அருள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

ஈழத்தமிழர் பிரச்னையையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பசுமை தாயகம் சார்பில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 34 -ஆவது கூட்டத் தொடர் குறித்த கலந்துரையாடல் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு, பாமக.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்று, "ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை -அடுத்தது என்ன'? என்ற கையேட்டை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:
இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகள் ஒரு லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து, பசுமை தாயகம் சார்பில் 2009 ஆண்டில் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
கடந்த 2015 -ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசும்போது, "இலங்கை விவகாரத்தில் இந்தியா மௌனமாக இருக்கிறது' என, பகிரங்கமாக எடுத்துரைத்தேன்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முதல்முறையாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்றும், தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இனப்படுகொலை என்று தெரிவிக்கவில்லை என்றாலும், அதற்கு இணையான அத்தனை கருத்துகளும் அதில் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அவற்றை இலங்கை அரசு நீர்த்துப் போக செய்தது.
பின்னர், இலங்கை அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து, 25 தீர்மானங்களை நிறைவேற்ற இருப்பதாகக் கூறி, இதுவரை உப்பு சப்பு இல்லாத 3 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம், இந்திய அரசின் மெத்தனம் தான். தற்போதைய பா.ஜ.க. அரசு இலங்கை அரசின் வணிகத் தேவைக்காக ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தயக்கம் காட்டுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வரும் மார்ச் 22 -ஆம் தேதி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. கடந்த 2015 -இல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் உள்ள அம்சங்களை புதிய தீர்மானத்தில் எந்த அளவும் குறைக்கக்கூடாது. ஐ.நா. பாதுகாப்பு குழுவினால் மட்டுமே இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஆகையால், ஈழத்தமிழர் பிரச்னையை ஐ.நா. பொதுச்சபை மூலமாக ஐ.நா. பாதுகாப்பு குழுவுக்கு கொண்டு வர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இளைஞர்களிடம் கொண்டு செல்ல திட்டம்: ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு இளைஞர்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக மத்திய அரசு அடிபணிந்தது. ஆகையால், ஈழத்தமிழர் பிரச்னையையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம் என்றார் அன்புமணி ராமதாஸ்.
இந்த கூட்டத்தில், பாமக துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ். அதிகாரி தேவசகாயம், கவிஞர் காசியானந்தன், பேராசிரியர் சரஸ்வதி, இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com