சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்

சின்னமலை - தேனாம்பேட்டை டிஎம்எஸ் இடையே 4 கி.மீ. தூரத்திலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்ற மெட்ரோ ரயில் அதிகாரிகள்.
சென்னை மெட்ரோ ரயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்ற மெட்ரோ ரயில் அதிகாரிகள்.

சின்னமலை - தேனாம்பேட்டை டிஎம்எஸ் இடையே 4 கி.மீ. தூரத்திலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் முதல் முறையாக நடைபெறும் இந்தச் சோதனை ஓட்டத்தில் முதல் முயற்சியாக டீசல் என்ஜின் ரயில் வைத்து இயக்கப்பட்டது. சென்னையில், இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்போது சென்னை விமான நிலையம் முதல் நேரு பூங்கா வரை உயர் நிலைப் பாதையிலும், சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில்பயணிகள் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை சென்ட்ரல் முதல் சின்னமலை வரையிலான சுரங்கப் பணிகள் பல்வேறு தடைகளை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக சின்னமலை முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரையிலான 4 கி.மீ. தூரத்துக்கான சுரங்க வழிப்பாதை பணிகள் நிறைவு பெற்று தண்டவாளப் பணிகளும் முடிந்துவிட்டது. இதனையடுத்து இவ்வழித்தடத்தில் முதல் முறையாக டீசல் என்ஜினை வைத்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை ஓட்டத்தை தொடங்கினர்.
டீசல் என்ஜின் எதனால் ?: டீசல் இன்ஜினை மட்டும் ஓட்டி பார்க்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டதற்கான காரணம், சுரங்கப்பாதையில் நவீன தொழில்நுட்பத்தில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்திலேயே தண்டவாளம் அமைக்கும் பணியை சோதனை செய்து, அதில் உள்ள நிறை, குறைகளை வைத்து தொடர்ந்து தண்டவாளம் அமைக்கும் பணியை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் 60 டன் எடை கொண்டது.
சோதனை ரயில் என்ஜினில் மெட்ரோ ரயில் நிறுவன முக்கிய அதிகாரிகள் பலரும் பயணித்தனர். இன்னும் ஓரிரு வாரங்கள் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம் தொடரும் என மெட்ரோ ரயில் தரப்பில் கூறப்படுகிறது.
பின்பு, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும்.
இப்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்குப் பின் பயணிகள் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.
டீசல் என்ஜின் சிறப்புகள்: மின்தடை காரணமாக ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் நின்றுவிட்டால், அல்லது சுரங்கப்பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பழுது ஏற்பட்டு ரயில் சுரங்கத்தில் பயணிகளுடன் சிக்கிக் கொண்டால், உடனடியாக கோயம்பேடு பணி மனையில் இருந்து டீசலால் இயங்கும் இழுவை என்ஜின் மூலம் இழுத்து வெளியே கொண்டு வர முடியும். மேலும், கோயம்பேடு பணிமனையில் மின்கம்பி இல்லாத பகுதியில் மெட்ரோ ரயிலை இழுவை என்ஜின் மூலம் இழுத்து தண்டவாளத்தில் கொண்டு வந்து நிறுத்தவும் பயன்படுத்தப்படும்.
இந்த இழுவை என்ஜின் 7 ஆயிரம் குதிரை சக்தி பலம் கொண்டது. மற்ற நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனங்களில் பேட்டரி மூலம் இயங்கும் இழுவை என்ஜின்தான் உள்ளது.
சென்னையில் டீசல் மூலம் இயங்கும், அதே நேரம் குறைந்த அளவே புகை வெளியே வரும் அளவுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இழுவை என்ஜின் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com