சீரான குடிநீர் விநியோகம் கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சீரான குடிநீர் விநியோகம் கோரி சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

சீரான குடிநீர் விநியோகம் கோரி சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யூர் வட்டம், சூனாம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட வில்லிப்பாக்கம், காவனூர், தேன்பாக்கம், 57.கொளத்தூர், பள்ளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களாக சீரான முறையில் ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீரை விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பல கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்காமலேயே அவற்றை அமைத்ததாகக் கணக்கு காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டு கொள்ளவில்லை என்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அப்பகுதி பொது மக்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் குடிநீர் கேட்டு சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயந்தி தலைமையில் அனைவரும் அலுவலகத்தினுள் செல்ல முயன்றனர். அவர்களை சித்தாமூர் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவியின் சட்டையைக் கிழித்து காவல் உதவி ஆய்வாளர் முரளிதரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கச் முயன்ற மாதர் சங்க நிர்வாகிகளும் தாக்கப்பட்டனர். இதனையடுத்து மாதர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகாவதி பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.பாரதிஅண்ணா, செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வா.பிரமிளா, வட்டத் தலைவர் ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com