உறவினரை தாக்கியவர்களை எச்சரித்தவர் வெட்டிக் கொலை

தாழம்பூர் அருகே உறவினரிடம் தகராறு செய்தவர்களை எச்சரித்தவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

தாழம்பூர் அருகே உறவினரிடம் தகராறு செய்தவர்களை எச்சரித்தவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கேளம்பாக்கத்தை அடுத்த தாழம்பூர் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (45), இவரது அண்ணன் துலுக்கானம் (48), நாவலூர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் துலுக்கானத்தின் வீட்டுக்கு அவரது மருமகன் கமலக்கண்ணனும், அவரது உறவினர் விஷ்ணுவும் சனிக்கிழமை வந்துள்ளனர். இதையடுத்து தாழம்பூரில் உள்ள கஜேந்திரனின் வீட்டுக்குச் சென்ற விஷ்ணு, அவரது மகளுடன் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதைப் பார்த்த உள்ளூர்வாசிகளான நீலகண்டன், கார்த்திக் மணி ஆகியோர் விஷ்ணுவிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக தாழம்பூரைச் சேர்ந்த அசோக்குமாருக்கும், விஷ்ணுவுக்கும் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த கும்பல் விஷ்ணுவை சரமாரியாகத் தாக்கி, அவர் வந்த மொபெட்டை பறித்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து கஜேந்திரனிடம் விஷ்ணு கூறியுள்ளார். இதையடுத்து, கஜேந்திரன் அந்த கும்பலை எச்சரித்துவிட்டு, விஷ்ணுவின் மொபெட்டை மீட்டு வந்துள்ளார்.
பின்னர், கஜேந்திரன் அழைத்ததையடுத்து, தாழம்பூரில் உள்ள கஜேந்திரன் வீட்டுக்கு வந்த கமலக்கண்ணன் மொபெட்டை எடுத்துக் கொண்டு நாவலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை மடக்கிய சிலர் தகராறில் ஈடுபட்டு மொபெட்டை பறித்துள்ளனர். இதுகுறித்து கஜேந்திரனிடம் கமலக்கண்ணன் செல்லிடப்பேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே கஜேந்திரன் மொபெட்டில் வந்தபோது, மறைந்திருந்தவர்கள் கஜேந்திரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கஜேந்திரனின் சடத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் கஜேந்திரனை தாழம்பூரைச் சேர்ந்த சபாபதி, நீலகண்டன், மணி, கார்த்திக் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து சபாபதி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com