முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: நவ.21-இல் தொடக்கம்

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 21 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்குகிறது. 

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 21 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்குகிறது. 
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் நடத்தப்படவுள்ளன. அதன்படி, தடகளம், கையுந்து பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டென்னிஸ், மேசைப்பந்து இறகுபந்து ஆகிய 7 போட்டிகளும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுபோல், கால்பந்து 22 ஆம் தேதியும், கூடைப்பந்து 26 ஆம் தேதியும், கபடி போட்டி டிசம்பர் 1 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 
இப்போட்டிகள் அனைத்தும் காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெறும். இதில் தடகளம், நீச்சல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மற்றும் குழுப்போட்டிகளில் தேர்வாகும் வீரர், வீராங்கனைகள் மட்டுமே மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதோடு, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்குப் பயணப்படி, தினப்படி ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்படும். இந்தப் பயணப்படி, தினப்படி ஆகியவை மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கப்படாது. 
தகுதிகள்: போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியன்று, 21 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது,1997 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்றோ அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கான வயதுச் சான்றிதழ் சமர்ப்பித்தல் அவசியம். போட்டியாளர்கள் அனைவரும் உரிய வயதுச்சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்று (அசலாக) மற்றும் மாணவர்கள், பணிபுரிபவர்கள் உரிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வரவேண்டும். 
மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாவது வசித்திருக்க வேண்டும். அதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றினை அதாவது, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பள்ளி மதிப்பெண் சான்று, பள்ளி மாறுதல் சான்று உள்ளிட்ட சான்றுகளின் நகல்களை மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும். அதோடு, பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படங்கள் கொண்டு வருதல் அவசியம். 
வங்கி கணக்கு புத்தக நகல்: பரிசுத்தொகையானது வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட வேண்டும் என உறுப்பினர் செயலர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலினை அவசியம் கொண்டு வருதல் வேண்டும். குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கொண்டு வராதவர்கள் கண்டிப்பாக போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். 
தடகளம், நீச்சல் போட்டிகள்: ஆண்களுக்கான தடகளப்போட்டியில், 100 மீ, 800மீ, 5000மீ, 110 மீ. ஹர்டல்ஸ், உயரம், நீளம் தாண்டுதல், டிரிப்பிள் ஜம்ப் மற்றும் குண்டு, தட்டு, ஈட்டி எறிதல் ஆகியவை உள்ளன. அதுபோல், தடகள போட்டியில் பெண்களுக்கு, 100மீ, 400மீ, 3000மீ, 100மீ. ஹர்டல்ஸ், உயரம், நீளம் உள்ளிட்ட தாண்டும் போட்டிகள் மற்றும் குண்டு, தட்டு, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் உள்ளன. நீச்சல் போட்டிகளில் இருபாலருக்கும், 50மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக், 200மீ தனிநபர் மெட்லே ஆகிய நீச்சல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
நவம்பர் 20-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: இதில் கலந்துகொள்ளத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை, மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ரயில்வே சாலை, காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். 
மேலும், விவரங்களுக்கு 7401703481 எனும் செல்லிடப்பேசி எண்ணில் வீரர், வீராங்கனைகள் ஆகியோர் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com