சுகாதார சீர்கேட்டின் பிடியில் திருக்காலிமேடு... !

நீண்ட நாள்களாக தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரால் திருக்காலிமேடு பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. 
சுகாதார சீர்கேட்டின் பிடியில் திருக்காலிமேடு... !

நீண்ட நாள்களாக தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரால் திருக்காலிமேடு பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. 
காஞ்சிபுரத்தை அடுத்துள்ளது திருக்காலிமேடு. காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் உள்ள பெரும்பாலான கழிவு நீரானது திருக்காலிமேட்டையொட்டி உள்ள கால்வாய்களின் வழியே நகராட்சி கழிவு நீர் தொட்டிகளுக்கு சென்றடைகிறது. மேலும், சிறு மழை பெய்தாலும் இப்பகுதிகளில் தெருக்கள் குளம் போல் காட்சியளிக்கின்றன. 
கடந்த சில நாள்களாக காஞ்சிபுரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, இப்பகுதியிலுள்ள என்.எஸ்.கே. நகர், காசிம் நகர், புதிய பெரியார் நகர், சத்யா நகர் பகுதிகளில் சாலைகள், தெருக்கள், காலி மனைகளில் அதிகப்படியான மழை நீர் தேங்கி உள்ளது.
இதனால், அப்பகுதியில் வசித்துவரும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன், டெங்கு பாதிப்பு தீவிரமாக இருந்து வரும் நிலையில், இதுபோன்ற சுகாதாரச் சீர்கேட்டால் திருக்காலிமேடு பகுதி மக்கள் மேலும் பாதிப்படைவர் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து திருக்காலிமேடு 26, 27-ஆவது வார்டு பகுதியினர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, திருக்காலிமேடு பகுதியானது, நத்தப்பேட்டை ஊராட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. 
அதற்கு முன்னதாகவே, இப்பகுதியில் பெருமாள் நாயக்கர் குட்டை, சுடுகாட்டு குட்டைகள் ஆகியவை இருந்தன. இந்நிலையில், திருக்காலிமேடு பகுதி காஞ்சிபுரம் பெரு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
அத்துடன், காஞ்சிபுரம் நகரின் மொத்த குப்பைக் கழிவுகளும் இப்பகுதிக்கு அருகே தான் கொட்டப்பட்டு வருகிறது. 
மேலும், நகர்ப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கால்வாய்கள் வழியாக நகராட்சி அமைத்திருக்கும் பெரிய தொட்டிகளுக்கு வருகிறது. அத்துடன், கடந்த சில ஆண்டுகளாகவே, இங்குள்ள இடங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, குடியிருப்புகளும் அதிகரித்து விட்டது. இதனால், மழைக்காலங்களில் திருக்காலிமேடு பகுதி குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் கழிவு நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்கி விடுகின்றன. 
அவ்வாறு, தேங்கும் நீரால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. கொசுக்களால், மர்மக் காய்ச்சல் பாதிப்பும் இருந்து வருகிறது. நகராட்சி பணியாளர்கள் அவ்வப்போது கொசு மருந்து அடிக்க வருகின்றனர். இருப்பினும், திருக்காலிமேடு குட்டைப் பகுதிகள் குடியிருப்புகளாக மாறியுள்ளதால் மழை, கழிவு நீர் தேங்குவதோடு சுகாதாரச் சீர்கேடும் அதிகரித்துள்ளது. 
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதிக்க வேண்டும். மேலும், குட்டை, புறம்போக்கு பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்தி, உரிய மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com