பருவ மழைக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் தயார்நிலையில் இருக்குமாறு அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் தயார்நிலையில் இருக்குமாறு அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாதவாறு பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்துப் பேசியதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பருவமழை பாதிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாதிப்புக்குள்ளான 1,128 இடங்களில் முதல் உதவி அளிப்போர், மீட்புக்குழுவினர், நீச்சல் தெரிந்தவர்களின் விவரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அவர்களுடன் இணைந்து முன் அனுபவத்தை வைத்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போது உடனடியாக வாய்க்கால் அடைப்புகளை நீக்குதல், மழைநீர் தேங்காதவாறு தூர்வாரும் இடங்களில், குப்பைகளால் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை 51 மண்டல குழுக்கள் கவனித்து தெரிவிக்க வேண்டும். அதன்மூலம், போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவேண்டும். அதுபோல், நிவாரண முகாம்களுக்கு செல்லும் சரியான வழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், முதலுதவிகள் குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், விடுதிகளில் அவசர காலங்களில் வெளியேற்ற தேவையான திட்டம் வைத்திருக்க வேண்டும். 
குறிப்பாக, ஜெனரேட்டர்களை மருத்துவமனைகளில் உயரமான பகுதிகளில் வைத்திருப்பது, உள்நோயாளிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு விரைந்து தகவல் வழங்கவேண்டும். 
அதுபோல், தொலைத்தொடர்பு கோபுரங்கள் , அவசர எண் இணைப்பு ஆகியவை எந்த நேரத்திலும் பாதிக்காதவாறு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள் தேவையான அளவுக்கு, பெட்ரோல், டீசல், எரிவாயு உருளைகள் ஆகியவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றார். 
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் சரஸ்வதி கணேசன், வட்டாட்சியர்கள், நேர்முக உதவியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவன, தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள், முதல் உதவி அளிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com