வைகோ கருத்தை சர்ச்சையாக்கக் கூடாது: துரைமுருகன்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கருத்தை ஊடகங்கள் சர்ச்சையாக்கக் கூடாது என்று திமுக பொருளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வைகோ கருத்தை சர்ச்சையாக்கக் கூடாது: துரைமுருகன்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கருத்தை ஊடகங்கள் சர்ச்சையாக்கக் கூடாது என்று திமுக பொருளர் துரைமுருகன் தெரிவித்தார்.
 திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த டி.ஏ.ரத்தினத்தின் படம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றின் திறப்பு விழா காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான க.சுந்தர் தலைமை வகித்தார். மாநில மாணவரணிச் செயலரும் எம்எல்ஏ-வுமான எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு, டி.ஏ.ரத்தினத்தின் படத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
 இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை எதிர்த்துதான் கூட்டங்களில் பேசுகிறோம். அதேபோல், அக்கட்சிகள் நடத்தும் கூட்டத்தை வாழ்த்தி, அவை வெற்றி பெறும் என்று எப்போதும் கூறிக் கொண்டிருக்க முடியாது. திமுகவை பாஜக குறை கூறுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த கணிப்புகளை யாரும் நம்புவதில்லை.
 வைகோவின் தொண்டர்கள் குறித்து அவருக்குத் தெரியும். அதனால்தான், ஒவ்வொரு தொண்டரும் ஒரு யானைக்கு சமம் என்று கூறியிருக்கிறார். இதை ஊடகங்கள் குழப்பி சர்ச்சையை ஏற்படுத்தக்கூடாது.
 கேரளத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி நேரில் சென்றார். நிதியை அள்ளிக் கொடுத்தார்.
 அவ்வகையில், ஒரு கம்யூனிஸ்ட் முதல்வரிடம் கூட பிரதமர் மோடிக்கு பயம் இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கஜா புயலால் சுமார் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 ஆனால், அதிமுக அரசை மதித்து மோடி தமிழகத்துக்கு வரவும் இல்லை; நிதியைத் தரவும் இல்லை. இதிலிருந்து, அதிமுகவினரையும், அதிமுக அரசையும் பிரதமர் மோடி மதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
 மறைந்த திமுக தலைவரின் சிலைத் திறப்பு விழா மிகச் சிறப்பாக இருக்கும். மேக்கேதாட்டு என்ற இடம் சிறியது. மேக்கேதாட்டு என்பதுதான் ஆடுதாண்டு காவிரி. இதுபோன்ற இடம் பூம்புகாரிலும் உள்ளது.
 அதாவது சிறிய பகுதி என்று அதற்கு அர்த்தம். அந்த இடத்தில் ரூ.6 ஆயிரம் கோடியில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணையைப் போல் எவ்வாறு அணை கட்ட முடியும்? மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது, எங்கு கட்டப்படுகிறது என எதுவுமே அதிமுகவினருக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
 இவ்விழாவில், திமுக நகர செயலர் ஆறுமுகம், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன், திமுக மற்றும் திக மாவட்ட, வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com