முதியோர் சித்திரவதை விவகாரம்: கோட்டாட்சியர் தலைமையில் 6 மணி நேரம் விசாரணை

சாலவாக்கம் அருகே முதியோரை சித்திரவதை செய்து சடலத்துடன் காய்கறி வாகனத்தில் அனுப்பியது தொடர்பாக காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் கருணை இல்ல உரிமையாளரிடம்
விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள். (உள்படம்) தனியார் கருணை இல்ல உரிமையாளர் தாமஸ்.
விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள். (உள்படம்) தனியார் கருணை இல்ல உரிமையாளர் தாமஸ்.

சாலவாக்கம் அருகே முதியோரை சித்திரவதை செய்து சடலத்துடன் காய்கறி வாகனத்தில் அனுப்பியது தொடர்பாக காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் கருணை இல்ல உரிமையாளரிடம் புதன்கிழமை 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே பாலேஸ்வரத்தில் தனியாருக்குச் சொந்தமான இறக்கும் தருவாயில் உள்ள அனாதை முதியோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லம் தமிழகத்தில் தாம்பரம், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ளன. 
இதில், உத்தரமேரூர் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு தாம்பரம் கிளை முதியோர் காப்பகத்திலிருந்து, திருவள்ளூரைச் சேர்ந்த அன்னம்மாள், திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வராஜூ ஆகியோர் வலுக்கட்டாயமாக சடலத்துடன் வேனில் அடைத்து வைத்து அனுப்பியுள்ளனர். 
இந்நிலையில், பாலேஸ்வரத்துக்கு வரும் வழியில் அன்னம்மாளின் அலறல் சப்தத்தைக் கேட்டு, அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர். 
இதையடுத்து, கருணை இல்லத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 
6 மணி நேரம் விசாரணை 
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்கிழமை காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜூ தலைமையில், சமூகநலத் துறை, காவல், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறையினர் சார்பில் 15-க்கும் மேற்பட்டோர் தனியார் கருணை இல்லத்துக்கு வந்தனர். அங்கிருந்த அனைத்து தளங்களிலும் உள்ள முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோரின் நிலை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, அவர்களின் விவரங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. அதன்பிறகு, இல்ல உரிமையாளர் தாமஸிடம் முதியோரை துன்புறுத்தியது, பிரேதத்தை காய்கறி வேனில் அனுப்பியது, இல்லத்துக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மாலை 4 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். 
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் கூறியதாவது: வருவாய்த் துறை, சமூகநலத் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் நேரில் ஆய்வு செய்து, முதல் கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
மாதந்தோறும் 30-க்கும் மேற்பட்டோர் இறந்தது தொடர்பாக ஆவணங்களைக் கேட்டுள்ளோம். அதுபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தான் கருணை இல்லம் நடத்துவதற்கான அனுமதி உள்ளது. அதன்பிறகு, இல்லம் நடத்த சமூகநலத் துறை அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்குவது தொடர்பாக பல்வேறு சான்றிதழ்களைக் கேட்டுள்ளோம். 
மேலும் விசாரணை செய்த பிறகு, முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். அதுபோல், இறந்தவர்கள் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளோம். 270 பேருக்கு மேல் தற்போது இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல், எத்தனை பேருக்கு இங்கு சிகிச்சை தேவை, இதற்காக, மருத்துவமனைக்கு மாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. காய்கறி வேனில் சடலம் ஏற்றி வந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com