போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம்: 8 நாள்களுக்குப் பின் கிராமப் பகுதியில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகள்

போக்குவரத்து ஊழியர்கள் 8-ஆவது நாளாக தொடர்ந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த 8 நாள்களுக்குப் பிறகு கிராமப் பகுதிகளில் அரசுப்

போக்குவரத்து ஊழியர்கள் 8-ஆவது நாளாக தொடர்ந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த 8 நாள்களுக்குப் பிறகு கிராமப் பகுதிகளில் அரசுப் பேருந்துகளை இரவு நேரங்களில் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அரசுப் பேருந்து ஊழியர்கள் 8-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பணிக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தினர். இதில், காஞ்சிபுரம், ஓரிக்கை உள்ளிட்ட பணிமனைகளிலிருந்து வழக்கம் போல் 250-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் காலை 7 மணி முதல் பணிமனையிலிருந்து வழித்தடங்களுக்கு அனுப்பப்பட்டன. கடந்த 3 நாள்களாக போக்குவரத்து நிர்வாகத்தை போலீஸார் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இரவு சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், தனியார் பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் அதிக சேவைகளை வழங்கி வந்தன. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் 40 சதவீதம், இதர நிறுவனங்களிலிருந்து ஓட்டுநர்கள், தனியார் பேருந்துகளின் நடத்துநர்களை வைத்து இதுவரை அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து காஞ்சிபுரம் மண்டல கிளை அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தினால் முழுமையான பேருந்து சேவை அளிக்கமுடியவில்லை. அதன்படி, 60-70 சதவீத வழித்தடங்களில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள், பெரு நிறுவன ஓட்டுநர்கள், தனியார் பேருந்துகளில் ஓய்வில் இருக்கும் நடத்துநர்கள் ஆகியோருக்கு சில மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் பொங்கல் பண்டிகையையொட்டி, வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கும் பணியாளர்களை தயார் படுத்தியுள்ளோம். இதற்காக, வட்டாரப் போக்குவரத்து கழகம் அனுப்பும் ஓட்டுநர்களை வைத்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாதவாறு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார். 
கிராமப் புறங்களில் பேருந்து சேவை: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தையடுத்து, வெளி மாவட்டம், உள்ளூர், கிராமப் பகுதிகளில் முழுமையான சேவை வழங்கப்படவில்லை. இதனால், முக்கிய வழித்தடங்களில் காலை முதல் மாலை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், உத்தரமேரூர், செங்கல்பட்டு, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதன்காரணமாக, இரவு நேரங்களில் பாதுகாப்பு கருதி பேருந்துகளை இயக்க வேண்டாம் என போலீஸார் காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன்படி, கடந்த 8 நாள்களாக காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு இரவில் நிறுத்தப்பட்டு, காலையில் அங்கிருந்து வரும் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது, மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 8 நாள்களாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக ஆங்காங்கே மர்ம நபர்கள் பேருந்து கண்ணாடியை கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இரவு நேரங்களில் கிராமங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. 
15 கிராமங்களில் நிறுத்தம்: இன்னும் ஓரிரு நாள்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, கிராமப் பகுதிகளிலிருந்து அதிகளவில் நகர்ப்பகுதிகளுக்கு வந்து செல்வர். எனவே, கிராம மக்களின் வசதிக்கென, காஞ்சிபுரத்திலிருந்து (பேருந்து எண் அடைப்புக் குறிக்குள்), மானாம்பதி (35), வெம்பாக்கம் (75), செய்யனூர் (7), ஆனம்பாக்கம் (36), புத்தகரம் (டி1), தக்கோலம் (49பி), சுத்தி (67), நாட்டேரி (டி4), கலவை (27பி) உள்ளிட்ட 15 கிராமங்களில் இரவு சேவை வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல், அக்கிராமங்களில் இரவு நிறுத்தம் செய்து காலை முதல் பேருந்து சேவை இயக்கப்படும். இதன்மூலம், பொங்கல் பண்டிகை நாள்களில் காஞ்சிபுரம் பணிமனை, பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றார். 
தினமும் 50 சதவீத வருவாய் இழப்பு
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் 40 சதவீத பணியாளர்களை வைத்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காஞ்சிபுரம், ஓரிக்கை உள்ளிட்ட பணிமனைகளில் நாளொன்றுக்கு சுமார் 3-7 லட்சம் ரூபாய் வருவாய் உள்ள பணிமனைகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான வருவாய் மட்டுமே வந்துள்ளது. இதனால், மீதமுள்ள 50 சதவீத அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பணிபுரிந்து வரும் தாற்காலிகப் பணியாளர்களுக்கு உரிய தினப்படி ஊதியம் போக்குவரத்து ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்படுகிறது என போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொங்கல்: தனியார் பேருந்துகள் வரவழைப்பு!
பொங்கல் பண்டிகைக்கு முன்பே போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினால், அதற்கேற்றவாறு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முனைந்துள்ளது. அதன்படி, தற்போது இருக்கும் ஊழியர்கள், தனியார் பேருந்து நடத்துநர்கள்,ஓட்டுநர்களை வைத்து அரசுப்பேருந்துகளையும், தனியார் வசம் இருக்கும் பேருந்துகளை வைத்தும் அனைத்து வழித்தடங்களில் இயக்க முடிவு செய்து, போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக, பணிஅனுபவம் உள்ள ஓட்டுநர், நடத்துநர்கள் வரவழக்கப்பட்டு ள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com