செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் உள்நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் உதவியாளர்கள் தங்குவதற்கான விடுதியைக் கட்டுவதற்கான பூமி பூஜை
 உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கான விடுதிக் கட்டடம் கட்டுவதற்கு நடத்தப்பட்ட  பூமி பூஜையைத் தொடங்கி வைத்த மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன்.
 உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கான விடுதிக் கட்டடம் கட்டுவதற்கு நடத்தப்பட்ட  பூமி பூஜையைத் தொடங்கி வைத்த மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் உள்நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் உதவியாளர்கள் தங்குவதற்கான விடுதியைக் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 420 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் புறநோயாளிகளும் நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும் வருகின்றனர். செங்கல்பட்டின் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், விழுப்புரம், வந்தவாசி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் மற்றும் சாலை விபத்துகளில் காயமடைந்தோர் இந்த மருத்துவமனைக்கு 
வருகின்றனர்.
இந்நிலையில், உள்நோயாளிகளை கவனித்துக் கொள்ள வரும் உதவியாளர்கள் மருத்துவமனை வார்டுகளில் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் தங்குவதற்கும் இடமில்லை. எனவே, அவர்கள் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டவெளியில் தங்கி அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் கொண்டு வரும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.
சிலர் அங்கேயே தங்கியிருந்து, வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவைச் சாப்பிடுவதால் மருத்துவமனையைச் சுற்றியுள்ள இடங்கள் அசுத்தமடைகின்றன. எனவே, நோயாளிகளுடன் வரும் அவர்களது உதவியாளர்கள் தங்குவதற்கு இடம் தேவை என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை எழுப்பி வந்தனர். இதையடுத்து நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் இரண்டடுக்கு கட்டடம் கட்ட ரூ. 1 கோடியே 8 லட்சம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கான விடுதிக் கட்டடம் கட்டுவதற்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. 
இந்த நிகழ்வுக்கு செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், நகராட்சி நகர நல அலுவலர் மருத்துவர் சித்திரசேனா, நகர அதிமுக செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிப் பொறியாளர் நித்யா வரவேற்றார். இதில், மருத்துவக்கல்லூரி முதல்வர் உஷா சதாசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டினார். 
அதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவமனைக்கு வரும் வெளியூர் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு 5,500 சதுர அடி யில் இரண்டடுக்கு கொண்ட தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்கலாம். இங்கு கழிப்பிடம், குடிநீர், சமையல் அறை மற்றும் பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். ஆறு மாதங்களில் இந்த கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு, விடுதி திறந்து வைக்கப்படும். கட்டுமானப் பணியை சென்னை கே.எல்.கே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் 6 மாதத்தில் மேற்கொள்கிறது. 
அதைத் தொடர்ந்து விடுதியின் திறப்பு விழா பெரிய அளவில் நடைபெறும். விடுதி அமைக்கப்பட்ட பின் அதில் நோயாளிகளின் உதவியாளர்கள் பாதுகாப்பாகத் தங்கலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com