வீட்டுமனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் அடுத்த சூரை கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு

மதுராந்தகம் அடுத்த சூரை கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு நிலஉரிமை மீட்புக் குழுவினர் மதுராந்தகம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். சூரை கிராம தலித் சமுதாயத்தினர் தாங்கள் குடியிருக்கும் நிலப்பகுதிக்கு குடிமனை பட்டா கேட்டு மதுராந்தகம் வருவாய்த்துறைக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை
அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவின்மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதில் அவர்களின் வசிப்பிடம் 
நீர்ப்பிடிப்பு பகுதி என காரணம்காட்டி பட்டா வழங்க மறுத்து விட்டனர் என்கின்றனர்.
இதே போல லத்தூர் ஒன்றியம், தண்டரை ஊராட்சி,சித்தாமூர்ஒன்றியம் வால்காடு இருளர் சமுதாய குடியிருப்புப் பகுதி, இரும்புலி ஊராட்சி நரிக்குறவர் குடியிருப்பு, பெருங்கரணை ஊராட்சிக்கு உள்பட்ட பெரியகளக்காடு, அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியம், மின்னல் சித்தாமூர், முருங்கை, வெள்ளப்புத்தூர், எல்.எண்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தலித் சமுதாய மக்களுக்கும் குடிமனை பட்டா வழங்காமல் இருப்பதால் அவர்களும் அரசின்நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். 
அப்பகுதிகளில் கடந்த 3 தலைமுறைகளாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டாவை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தமிழ்நாடு நிலஉரிமை மீட்புக்குழு ஆகியவற்றின் நிர்வாகிகள்,மதுராந்தகம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலஉரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேவ.ருக்மாங்கதன் தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலர் ப.பாரதிஅண்ணா, மதுராந்தகம் வட்டத் தலைவர் வி.பொன்னுசாமி, செய்யூர் வட்டச் செயலர் எஸ்.கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக, மதுராந்தகம் புறவழிச்சாலை அம்பேத்கர் சிலை அருகில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று மதுராந்தகம் சார் ஆட்சியர் கிள்ளி சந்திரசேகரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com