பிரதமர் மோடி ஏப்.14-இல் திருவிடந்தைக்கு வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவிடந்தையில் ஏப்ரல் 14-ஆம் தேதி ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வருகிறார். 
பிரதமர் மோடி ஏப்.14-இல் திருவிடந்தைக்கு வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவிடந்தையில் ஏப்ரல் 14-ஆம் தேதி ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வருகிறார்.
 இதை முன்னிட்டு, உணவக- தங்கும் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி. தலைமையில் மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் ஏப்ரல் 14 முதல் 17-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறவிருக்கும் ராணுவ தளவாட கண்காட்சிக்காக ரூ. 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 280 ஏக்கர் நிலப் பரப்பில், கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
 இதனால் பல்வேறு துறைகளின் செயலர்கள், ராணுவ அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு, அதற்கானப் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
 இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், கடற்கரை விடுதிகளின் உரிமையாளர்கள், மேலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமை வகித்துப் பேசியதாவது:
 திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியில், பிரதமர் மோடி, அமைச்சர்கள், பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உள்பட உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த சமயத்தில் மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு வரும் நபர்கள் குறித்த முழு விவரங்களையும் கேட்டுப் பெற வேண்டும். மேலும் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், தங்குபவர்களின் ஆதார் அட்டை நகல், செல்லிடப்பேசி எண் போன்றவற்றை கேட்டுப் பெறுவதோடு, இவற்றை எழுதும் வகையில் நிரந்தரப் பதிவேடு பராமரிக்க வேண்டும்.
 வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகளிடம் பாஸ்போர்ட் நகலைப் பெறுவதோடு, அவர்களின் விசா காலத்தையும் சோதனையிட வேண்டும், இதில் சந்தேகப்படும்படியாக தகவல் கிடைத்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி நடக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 கூட்டத்தில், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜூ, காவல் ஆய்வாளர்கள் சிரஞ்சீவி (மாமல்லபுரம்), ரமேஷ் (திருப்போரூர்), ராஜாங்கம் (கேளம்பாக்கம் விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com