மேல்நிலைத் தொட்டியில் பறவை விழுந்ததால் குடிநீரில் துர்நாற்றம்

கடமலைப்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பறவை விழுந்து இறந்ததால் அதில் இருந்து குழாய் மூலம் வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது. 

கடமலைப்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பறவை விழுந்து இறந்ததால் அதில் இருந்து குழாய் மூலம் வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கடமலைப்புத்தூர் ஊராட்சி, 4-ஆவது வார்டு, மாரியம்மன் கோயில் தெருவில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் கடந்த 4 தினங்களுக்கு முன் ஒரு பறவை தவறி விழுந்து இறந்தது. இதனை யாரும் கவனிக்கவில்லை.
 இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று குடிநீரை தொட்டியில் பிடித்த அப்பகுதியைச் சேர்ந்த பெண் தண்ணீரில் இறந்த பறவையின் இறகுகள் மிதந்ததைக் கண்டார். குடிநீரில் துர்நாற்றம் வீசியதையும் உணர்ந்தார்.
 இதுபற்றி அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸிடம் புகார் கூறினர். இதுபற்றி அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், மக்களின் உடல் நலத்தைக் கண்டுகொள்ளாமலும் மெத்தனமாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
 இதனிடையே, அப்பகுதி இளைஞர்கள் சிலர் குடிநீர்த் தொட்டியில் இறந்த பறவையின் உடலை வெளியே எடுத்தனர். எனினும், தொட்டியில் இருந்த நீரைக் குடித்த ஒரு சிலருக்கு வாந்தி போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்து, அதில் உள்ள குடிநீரை அகற்றி, புதிய குடிநீரை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com