கடுமையான விதிமுறைகள் எதிரொலி: மந்தகதியில் விநாயகர் சிலைகள் விற்பனை

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிள்ளையார் சிலைகள் விலை போகாததால் அவற்றின்
கடுமையான விதிமுறைகள் எதிரொலி: மந்தகதியில் விநாயகர் சிலைகள் விற்பனை

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிள்ளையார் சிலைகள் விலை போகாததால் அவற்றின் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். சிலைகளை வைப்பதற்கு 24 கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதே சிலைகள் விலைபோகாததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானதும் முதன்மையாகவும் கருதப்படும் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கிக் கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தி ஆகும். எல்லோராலும், எல்லா மாநிலங்களிலும் வெகு சிறப்பாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்களால் ஆங்காங்கே கைப்பிள்ளையார், அச்சுப்பிள்ளையார் 
என மண்பாண்ட வியாபாரிகளால் செய்யப்படும் சிலைகளை மக்கள் நல்ல நேரம் பார்த்து வாங்குவர். மேலும், சிலைகளுக்கு குடை வைத்து, தாம்பூலத்தட்டு, கொழுக்கட்டை, பழங்கள், சுண்டல் ஆகியவற்றை பிள்ளையாருக்குப் படைத்து அவரை வழிபட்டு இப்பண்டிகையைக் கொண்டாடுவர். அதன் பின் சிலையை 3 அல்லது 5 நாள்கள் வீட்டில் வைத்திருந்த பின்னர் குளம், ஏரி, ஆறு, கடல் என நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைத்துவிட்டு வருவது வழக்கம்.
அதேபோல் அனைத்து பிள்ளையார் கோயில்களிலும் வெகு சிறப்பாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. 
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனை மற்றும் விநாயகர் சதுர்த்தி அமைப்பினர் தனித்தனியாக பல்வேறு தெருக்களில் 5 அடி முதல் 7 மற்றும் 9 அடி என பல்வேறு விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டாடுவர். விழா முடிந்த பின் 3ஆம் நாள், 5ஆம் நாள், 7ஆம் நாள் எனக் கணக்கிட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிலைகளின் ஊர்வலத்தை நடத்தி அவற்றை கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைப்பார்கள். இந்தச் சிலைகளை சீசன் தொழிலாக ஆர்வத்துடன் பலரும் செய்கின்றனர். பல்வேறு வகையான விநாயகர் சிலைகளைச் செய்து விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்கள், நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இருந்து பலரும் வந்து ஆர்டர் கொடுத்தும், சிலைகளை செய்யக் கோரி, விநாயகர் சதுர்த்திக்கு 3 தினங்களுக்கு முன்போ அல்லது முதல் நாளோ வந்து வாங்கிச் செல்வர். 
இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை வைப்பது தொடர்பாக தமிழக அரசு 24 விதிமுறைகளை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதை அப்படியே நீதிமன்றம் ஏற்றதால் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. 
இதனால் விநாயகர் சிலைகளை வாங்குவோருக்கு ஆர்வம் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. சிலைகள் விலைபோகாமல் காட்சிப் பொருளாக இருப்பதாக விற்பனையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து செங்கல்பட்டை அடுத்த திருத்தேரி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்து விற்பனைக்காக வைத்திருக்கும் முத்துலட்சுமி வேலழகன் கூறியதாவது:
நாங்கள் விநாயகர் சிலைகள் விற்பனையை சீசன் தொழிலாக 5 தலைமுறைகளாக செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆர்டரின்பேரில் சிலைகள் செய்யப்பட்டு அவற்றை வாங்கிச் செல்வார்கள். மேலும் கூடுதலாக நாங்களும் சிலைகளைச் செய்து வைத்திருப்போம். ஆர்டர் இல்லாமல் திடீரென வந்து சில அமைப்பினர் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
எனினும், விற்பனையாகாமல் சில சிலைகள் இருக்கும். அவற்றை அடுத்த ஆண்டு புதுப்பித்து விற்று விடுவோம். ஆனால், இந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பட்டாசுக் கடைகளுக்கு விதிக்கப்படும் விதிமுறைகளை விட கடுமையான விதிமுறைகளை விநாயகர் சிலைகளை வைப்பதற்கு விதித்துள்ளது. காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிலைகளின் உயரம் குறைக்கப்பட்டு வர்ணங்கள் குறித்த விதிமுறைகள் உள்ளிட்ட 24 விதிமுறைகளை அறிவித்துள்ளனர். 
இதனால் நாங்கள் செய்து வைத்துள்ள விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு இதுவரை யாரும் வரவில்லை. யாராவது வந்தாலும் விலையைக் கேட்டுவிட்டு உயர்நீதிமன்ற உத்தரவைக் காட்டி இந்த விதிமுறைகளுக்குள் சிலைகள் இருக்க வேண்டும் எனக் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர். பல துறைகளுக்குச்சென்று அனுமதி பெறுவதற்கு அலைய வேண்டியுள்ளதை நினைத்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விநாயகர் சிலைகளை வாங்க வரவில்லை. 
எனினும், நாங்கள் ஆண்டுதோறும் செய்து வைப்பதைப் போல் இந்த ஆண்டும் எங்களது பணத்தைப் போட்டும், கடன் வாங்கியும் மூஷிக வாகன விநாயகர், சிங்க முக வாகன விநாயகர், கருட வாகன விநாயகர், மயில்வாகன விநாயகர், அம்மை அப்பன் சகோதரருடன் விநாயகர், பஞ்சமுக விநாயகர், சிவசக்தி விநாயகர், பவள விநாயகர் என பல்வேறு வகையான விநாயகர் சிலைகளைச் செய்து வைத்துள்ளோம். இன்னும் ஒன்று கூட விற்பனையாகவில்லை. 
இத்தொழிலில் ஐந்து தலைமுறைகளாக காணாத நஷ்டத்தை இப்போது கண்டுவிடுவோமோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது. காரணம் எனது கணவர் இறந்து 4 பெண்களையும், ஒரு ஆண் குழந்தையையும் இந்த தொழில் மூலம்தான் வளர்த்து ஆளாக்கி பட்டதாரிகளாக ஆக்கியுள்ளேன். மூன்று குழந்தைகள் பட்டப்படிப்பை முடித்தும் வேலைக்குப் போகாமல் எனக்கு உறுதுணையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளாவது சிலைகள் விற்றுவிடாதா என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com